இஸ்லாமிய இயக்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவில் தேரடி திடலில் இஸ்லாமிய இயக்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சங்கரன்கோவில்:
இந்தியா முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையை கண்டித்தும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தலைவர்கள் கைதை கண்டித்தும் அனைத்து கட்சிகள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் சங்கரன்கோவில் தேரடி திடலில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நகர தலைவர் சதாம் உசேன் தலைமை தாங்கினார். நசீர் வரவேற்று பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் திருமா காசி, நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கவேல், எஸ்.டி.பி.ஐ. மாநில வர்த்தக அணி பொதுச்செயலாளர் ஜாபர் அலி உஸ்மானி, வக்கீல் பிரபாகரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் குழந்தை வள்ளுவன், எஸ்.டி.பி.ஐ. நகர தலைவர் ஷேக் முகம்மது, நகர செயலாளர் அபுதாஹிர் மற்றும் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயற்குழு உறுப்பினர் நஜீர் உசேன் நன்றி கூறினார்.