4 இடங்களில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்


4 இடங்களில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
x

மதுரை மாவட்டத்தில் 4 இடங்களில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. துவரிமான் ஊராட்சியில் ஆட்டோ டிரைவர் கவுன்சிலர் ஆனார்.

மதுரை

மதுரை மாவட்டத்தில் 4 இடங்களில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. துவரிமான் ஊராட்சியில் ஆட்டோ டிரைவர் கவுன்சிலர் ஆனார்.

துவரிமான்

திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட துவரிமான் ஊராட்சியில் காலியாக இருந்து வந்த 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் கடந்த 9-ந்தேதி நடந்தது. அதில் சீப்பு சின்னத்தில் பால்பாண்டியும், திறவுகோல் சின்னத்தில் தெய்வமும் போட்டியிட்டனர்.மொத்தம் 510 வாக்குக்கு 372 வாக்குகள் பதிவானது

.திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலையில ்வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில் ஆட்டோ டிரைவரான பால்பாண்டி 225 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தெய்வம் 146 ஓட்டுகள் பெற்றார். ஒரே ஒரு ஒட்டு செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்து வெற்றிபெற்ற பால்பாண்டிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ராமர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணன் ஆகியோர் வெற்றி சான்றிதழை வழங்கினார்கள். இதில் தேர்தல் பார்வையாளர் பாரதிதாசன், திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் அன்பரசு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காளியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கோவிலாங்குளம்

உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிலாங்குளம் ஊராட்சியில் 6-வது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் கடந்த 9-ந் தேதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் பதிவான 403 வாக்குகளுக்கான வாக்கு எண்ணிக்கை செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் மேற்பார்வையாளர் வெங்கடேஷ்வரன், தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா முன்னிலையில் நடைபெற்றது. இந்த வார்டு உறுப்பினர் பதவிக்காக பிரியங்கா, சாந்தி, கனிமொழி, வளர்மதி என்ற 4 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்த நிலையில் பிரியங்கா 228 வாக்குகள் பெற்று 63 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட சாந்தி 165 வாக்குகளும், கனிமொழி 2 ஓட்டுகளும் பெற்றனர். வளர்மதி ஒரு ஓட்டு கூட பெறவில்லை. அவருக்கு அந்த வார்டில் ஓட்டு இல்லை.மேலும் வெற்றி பெற்ற பிரியங்காவிற்கு வெற்றி சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழங்கினர்.

நல்லமரம்

டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நல்லமரம் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் நடந்தது. இந்த வார்டில் பிருத்யும்னன் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த வார்டில் 146 வாக்குகள் உள்ளது. தேர்தலில் 129 வாக்குகள் பதிவானது.

இந்த நிைலயில் நேற்று காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயணன் தலைமையில் நடந்தது. இதில் சுரேஷ்குமார் 68 வாக்குகள் பெற்றார்.பிரித்யும்னன் 51 வாக்குகள் பெற்றார். செல்லாத ஓட்டுகள் 10 பதிவானது. இதை தொடர்ந்து சுரேஷ்குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பேரையூர் துணை சூப்பிரண்டு சரோஜா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலவளவு

கொட்டாம்பட்டி யூனியன் மேலவளவு ஊராட்சியில் 2-வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஊராட்சி துணை தலைவராக பதவி வகித்த சங்கீதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த தீவிபத்தில் உயிரிழந்தார். இதனால் காலியாக இருந்த 2-வது வார்டு தேர்தல் மேலவளவு அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு சாவடியில் நடைபெற்றது. இந்த வார்டில் மொத்தம் 494 வாக்காளர்கள். 2 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 320 வாக்குகள் மட்டுமே பதிவானது. போலீஸ் பாதுகாப்புடன் கொட்டாம்பட்டி யூனியன் அலுவலகத்தில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் போட்டியிட்ட மகேஷ்வரி 180 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுந்தரி 133 வாக்குகள் பெற்றார். 7 செல்லாத ஓட்டுகள் பதிவானது. வெற்றி பெற்ற மகேஷ்வரிக்கு யூனியன் ஆணையாளர் செல்லப்பாண்டி சான்றிதழ் வழங்கினார்.


Related Tags :
Next Story