துறையூரில் சிவன் கோவில் தேரோட்டத்தை விரைவில் நடத்த பக்தர்கள் கோரிக்கை


துறையூரில் சிவன் கோவில் தேரோட்டத்தை விரைவில் நடத்த பக்தர்கள் கோரிக்கை
x

துறையூரில் சிவன் கோவில் தேரோட்டத்தை விரைவில் நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருச்சி

துறையூர், ஆக.7-

துறையூர் பாலக்கரை அருகே ஆத்தூர் ரோட்டில் உள்ள நந்திகேஸ்வரர் கோவில் தேரோட்டம் கடந்த 1972-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவின்போது நடைபெற்றதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் 2 தேர் புறப்பாடு நடைபெறும். இதில் ஒரு தேரில் நந்திகேஸ்வரரும், மற்றொரு தேரில் மகாசம்பத்கவுரி அம்பாளும் எழுந்தருள்வார்கள். நான்கு மாட வீதிகளில் தேரை பக்தர்கள் வடம் பிடித்து எளிதாக இழுத்து வருவதற்காகவே தேரோடும் வீதிகளில் வடம் போக்கி தெரு அமைந்துள்ளது சிறப்பம்சமாகும்.

இந்நிலையில், கடந்த 50 ஆண்டுகளாக இக்கோவிலில் பிரம்மோற்சவ விழாவும், தேரோட்டமும் நடைபெறாமல் உள்ளது பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு அதனை சுற்றிலும், எதிரிலும் உள்ள கடைகள் மூலமாகவும், உண்டியல் காணிக்கை மூலமாகவும் வருமானம் வந்த போதிலும், தேரோட்டம் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்க அதிகாரிகள் முன்வருவதில்லை என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் கோவிலுக்குரிய 2 தேர்களும் மிகவும் பழுதான நிலையில் உள்ளது. பழமையான அந்த தேர்களை, கோவிலுக்கு சென்று திரும்பும் பக்தர்கள் வழிபட்டு வந்த நிலையில், கோவில் நிர்வாகம் தகரங்களைக் கொண்டு அந்த தேர்களை மறைத்துள்ளது. எனவே 2 தேர்களின் தற்போதைய நிலை குறித்து அறநிலையத் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று, புதிதாக 2 தேர்களை நிர்மாணித்து விரைவில் துறையூர் சிவன் கோவிலின் தேரோட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதே பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும்.


Next Story