பக்தர்கள் எதிர்பார்ப்பு -திருப்பரங்குன்றத்தில் இருந்து சோலைமலைக்கு மீண்டும் அரசு பஸ்கள் இயக்கப்படுமா?


திருப்பரங்குன்றத்தில் இருந்து சோலைமலைக்கு மீண்டும் அரசு பஸ்கள் இயக்கப்படுமா?

மதுரை

திருப்பரங்குன்றம்,

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிட்ட தெய்வீக புலவர் நக்கீரர் தவம் செய்த இடம் திருப்பரங்குன்றம். தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்த திருத்தலம் திருப்பரங்குன்றம். சுப்பிரமணிய சுவாமியுடன் தெய்வானை, கற்பக விநாயகர், துர்க்கை அம்பான், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனி பெருமாள் என்று ஒரே கருவறையில் 5 சன்னதிகள் அமைந்து இருப்பது இந்த தலத்தில்தான். பவளக்கனிவாய் பெருமாளும், சத்தியகிரீஸ்வரரும் நேருக்கு நேர் பார்ப்பது போன்று சன்னதி அமையப்பெற்று இருப்பதும் இங்குதான்.

இப்படி பல சிறப்புகள் கொண்ட திருப்பரங்குன்றம் கோவிலானது முருகனின் முதல்படை வீடாக அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவிழா காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

மீண்டும் இயக்கப்படுமா?

திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் முருகப்பெருமானை தரிசித்த கையோடு முருகப்பெருமானின் ஆறாம் படைவீடு வீடான சோலைமலைக்கு சென்று வருவது வழக்கமாக உள்ளது. ஆனால் பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் இருந்து அழகர்கோவிலுக்கு நேரடியாக பஸ்வசதி இல்லை. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பரங்குன்றத்தில் இருந்து அழகர்கோவிலுக்கு(சோலைமலைக்கு), மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இதனால் பக்தர்கள் சிரமமின்றி சோலைமலை, மடப்புரம் கோவிலுக்கு சென்று வந்தனர். நாளடைவில் திடீரென்று பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டன.

இதனால் திருப்பரங்குன்றம் வரும் பக்தர்கள் மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு வந்தது அங்கிருந்து அழகர்கோவிலுக்கு பஸ்சில் செல்லும் நிலை உள்ளது. இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பஸ்சிற்காக காத்திருக்கும் நிலையும் உள்ளதால் முதியோர், பெண்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே மீண்டும் திருப்பரங்குன்றத்தில் இருந்து அழகர்கோவிலுக்கு பஸ்கள் இயக்க வேண்டும். மேலும் புதிதாக பாண்டிக்கோவிலுக்கும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

மீண்டும் பஸ்

இதுகுறித்து பக்தர்கள் சிலர் கூறும் கருத்துகள் வருமாறு:

அழகப்பன் (திருப்பரங்குன்றம்): திருப்பரங்குன்றம் பகுதியில் ெரயில்வே மேம்பாலம் போடுவதற்கு முன்பு வரை திருநகரில் இருந்து திருப்பரங்குன்றம் வழியாக அழகர்கோவிலுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. பாலம் கட்டும் பணி தொடங்கிய பிறகு திருப்பரங்குன்றம் அழகர்கோவிலுக்கு சென்று வந்த பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. பக்தர்கள் வசதியை கருத்தில் கொண்டு மீண்டும் பஸ்கள் இயக்க வேண்டும்.

செல்வராணி(திருநகர்): திருப்பரங்குன்றத்தில் இருந்து அழகர்கோவிலில் உள்ள சோலைமலைக்கு இயங்கி வந்த அரசு பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. இது பக்தர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. முக்கிய திருவிழா காலங்களில் திருப்பரங்குன்றத்தில் இருந்து சோலைமலைக்கு பஸ் வசதி செய்ய வேண்டும்.

நடவடிக்கை

பக்தர் ஜோதிபாபுலால் கூறும்போது, திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை பெரியார் நிலையத்துக்கும், பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து சோலைமலைக்கும் இரண்டு பஸ் மாறிச் செல்வதில் உள்ள சிரமத்தை போக்குவதற்கு போக்குவரத்துறையினர் பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய விழாக்கள் நடைபெறும் நாட்களில் அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அழகர்கோவில் பகுதியை சேர்ந்த வியாபாரி சங்க தலைவர் முத்துப்பொருள்: கடந்த சில வருடங்களுக்கு முன்பு, முருகப்பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்திலிருந்து, கள்ளழகர் கோவிலுக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. பின்னர் திடீரென நிறுத்தப்பட்டு விட்டது, அழகர்கோவிலுக்கு மீண்டும் திருப்பரங்குன்றத்தில் இருந்து பஸ் இயக்க வேண்டும். இதனால் அழகர் மலையின் உச்சியில் உள்ள முருகனின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன், நூபுரகங்கை, ராக்காயி அம்மன், மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர், காவல் தெய்வம் பதினெட்டாம்படி கருப்பணசாமி ஆகிய கோவில்களை ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். முருக பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கை இது. எனவே நிறுத்தபட்ட அந்த டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.


Next Story