தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

மாற்றுத்திறனாளிகள் அவதி

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில் சாய் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதினால் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தெரு நாய்கள் தொல்லை

அரியலூர் மாவட்டம் ,ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிதம்பரம் சாலை அய்யனார் கோவில் தெருவில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையில் செல்லும் சிறுவர், சிறுமிகளை கடிக்க வருவதால் பெற்றோர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வடிகால்கள் ஆக்கிரமிப்பு

அரியலூர் மாவட்டம், தா.பழூர் நடு செட்டி தெரு மற்றும் நடுத்தெரு சந்திக்கும் இடத்தில் சிறு மழை பெய்தாலும் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழை பெய்தால் மழைநீர் வடிந்து ஓடும் பாதையை அடைத்து சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் அருகில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து விடுகிறது. இன்னும் சிறிது நாட்களில் மழைக்காலம் வர இருப்பதால் உரிய அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் வடிந்து ஓடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம்

அரியலூரில் இருந்து அம்மாகுளம் செல்லும் சாலையில் அய்யப்பன் ஏரிக்கரை முடிவில் சாலையில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் மின்கம்பம் இருப்பது தெரியாமல் அதில் மோதி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அச்சத்தில் பள்ளி மாணவர்கள்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பள்ளி வகுப்பு பகுதியில் இருந்து மைதானத்திற்குள் நுழையும் பகுதியில் வேப்பமரம் ஒன்று உள்ளது. அந்த வேப்ப மரத்தில் கதண்டு கூடு ஒன்று உள்ளது. பள்ளியில் சுமார் ஆயிரம் மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். கதண்டுகள் கடித்தால் மாணவ-மாணவிகள் பாதிப்படையும் வாய்ப்புகள் உள்ளதால் உரிய அதிகாரிகள் உடனடியாக அதனை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம்.


Next Story