தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
அரசு பஸ்களின் கட்டணம் குறைவாக இருப்பதால் பயணிக்க பலரும் முன் வருகிறார்கள்.
சென்னை,
நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் வெளியூரில் வசிப்பவர்கள் தீபாவளி பண்டிகையை, சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு ஏதுவாக தமிழக அரசு சிறப்பு பஸ்களை அறிவித்தது.
அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து இன்று (வியாழக்கிழமை) முதல் 11-ந் தேதி வரை 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக தினமும் இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 1,365 பஸ்கள் வீதம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 4,675 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு தயாராக உள்ளன.
சிறப்பு பஸ்களில் முன்பதிவு செய்து பயணம் செய்ய மக்கள் தயாராக உள்ளனர். இதுவரையில் 1 லட்சம் பேருக்கு மேல் முன்பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிறப்பு பஸ்கள் மாதவரம் புதிய பஸ் நிலையம், கே.கே. நகர் மாநகர பஸ் நிலையம், தாம்பரம் அண்ணா பஸ் நிலைய நிறுத்தம், பூந்தமல்லி விரைவுச்சாலை பஸ் நிறுத்தம் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையங்களில் இருந்து இன்று இயக்கப்படுகின்றன.
முன்பதிவு செய்த பயணிகள் அந்தந்த பஸ் நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் முக்கிய பஸ் நிலையங்களில் இருந்து கோயம்பேட்டிற்கு இணைப்பு பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அரசு பஸ்களின் கட்டணம் குறைவாக இருப்பதால் பயணிக்க பலரும் முன் வருகிறார்கள்.