தி.மு.க. அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லைகே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


தி.மு.க. அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லைகே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 24 Jan 2023 7:30 PM GMT (Updated: 24 Jan 2023 7:31 PM GMT)

குற்றச்சாட்டு

ஈரோடு

தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று ஈரோட்டில் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி அ.தி.மு.க. சார்பில் தேர்தல் வாக்குச்சாவடி குழு அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோடு பெரியார்நகரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி எம்.எல்.ஏ., கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வாக்குச்சாவடி குழு நிர்வாகிகளுக்கு வாக்காளர் பட்டியலை வழங்கி பேசினார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது மின்வெட்டு இல்லாத மாநிலமாக இருந்தது. கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறை, சுற்றுச்சூழல் துறை என அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டது. இன்றைய சூழலில் மக்கள் மனம் மாறி இருக்கிறார்கள். காரணம், மக்கள் நினைத்த எந்த பணிகளும் ஆட்சியாளர்களால் நிறைவேற்ற முடியவில்லை. தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ரூ.1,000 வழங்கப்படவில்லை. கியாஸ் மானியம் கொடுக்கப்படவில்லை. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது. சுமார் 3 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டது.

இரட்டை சிலை சின்னம்

ஆட்சி மாறி இருக்கிறதே தவிர, திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்ற எண்ணம் மக்கள் மனதில் இருக்கிறது. கிழக்கு தொகுதியை பொறுத்தவரை அமைதியாக, நேர்மையாக கடமையை ஆற்ற இருக்கிறோம். கட்சியின் பொதுச்செயலாளர் விரைவில் வேட்பாளரை அறிவிக்க இருக்க இருக்கிறார். அதன்பிறகு அனைவரும் வியக்கத்தக்க வகையில் தேர்தல் களம் அமையும்.

திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தலில் முதலில் வெற்றி பெற்றதைபோல ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியிலும் வெற்றி பெறுவோம். இரட்டை சிலை சின்னம் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் செயல்படும் அ.தி.மு.க.வுக்குதான் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு இதை எதிர்பார்க்கலாம்.

மக்கள் தீர்ப்பு

ஈரோட்டில் வியக்கத்தக்க வகையில் அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு சிறந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. குடிநீர் திட்டம், சாலை மேம்பாட்டு பணிகள், மேம்பாலம், பஸ் நிலையம் இடமாற்றுவது, அரசு ஆஸ்பத்திரியை சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தியது உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. எனவே மக்கள் தீர்ப்புக்கு பிறகு தெரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பகுதி செயலாளர் பெரியார்நகர் மனோகரன், அவைத் தலைவர் மீன்ராஜா, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், இளைஞர் அணி தலைவர் யுவராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் வீரப்பன்சத்திரம், அசோகபுரம், பி.பி.அக்ரஹாரம், கருங்கல்பாளையம் உள்ளிட்ட இடங்களில் நடந்த கூட்டத்திலும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு வாக்குச்சாவடி நிர்வாகிகளுக்கு வாக்காளர் பட்டியலை வழங்கினார்.


Next Story