சாயப்பட்டறை அமைக்கக்கூடாது


சாயப்பட்டறை அமைக்கக்கூடாது
x

சிலம்பிமங்கலம் ஊராட்சி சின்னாண்டிக்குழி கிராம மக்கள் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

கடலூர்

பரங்கிப்பேட்டை,

சிலம்பிமங்கலம் ஊராட்சி சின்னாண்டிக்குழி கிராம மக்கள் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெரியப்பட்டு ஊராட்சியில் 600 ஏக்கர் நிலப்பரப்பில் தனியாருக்கு சொந்தமான சாயப்பட்டறை அமைய உள்ளது. இந்த சாயப்பட்டறை செயல்பாட்டுக்கு வந்தால், அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் கடலில் கலக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த சாயப்பட்டறைக்கு ராட்சத அளவிலான ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படும். இதனால் பெரியப்பட்டு, சிலம்பிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டு குடிநீருக்கே திண்டாடும் நிலை ஏற்படும். இதுதவிர மேற்கண்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் பாதிக்கப்படும். கழிவுநீர் கடலில் கலக்கும்போது, மீன்கள் செத்துப்போகும் அபாயமும் உள்ளது. ஆகவே சாயப்பட்டறை அமைந்தால் பெரியப்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. குடியிருப்புகளை பொதுமக்கள் காலி செய்யும் நிலைமை ஏற்படும். எனவே 5 கிராம மக்கள் நலன்கருதி மேற்கண்ட சாயப்பட்டறையை பெரியப்பட்டில் அமைக்காமல் இருக்க அரசிடம் எடுத்துக்கூறி, அதற்கான பணிகளை தடுத்து நிறுத்தவேண்டும்.

இவ்வாறு மேற்கண்ட மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்ற பாண்டியன் எம்.எல்.ஏ. இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் எம்.எஸ்.எம். குமார், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜாங்கம், கிழக்கு ஒன்றிய செயலாளர் அசோகன், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், ஒன்றிய கவுன்சிலர்கள் தமிழரசி யோக பரணி, ஆனந்தஜோதி சுதாகர், கொத்தட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ரங்கசாமி,சிலம்பிமங்களம் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி ராஜேந்திரன், பெரியப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சுனன் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story