ஆஸ்பத்திரி வாசலில் தூக்கில் சென்னை டாக்டர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை


ஆஸ்பத்திரி வாசலில் தூக்கில் சென்னை டாக்டர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
x

தஞ்சை அருகே கால்நடை ஆஸ்பத்திரி வாசலில் சென்னை டாக்டர் தூக்கில் பிணமாக தொங்கினார்.

தஞ்சாவூர்,

சென்னை மதுரவாயல் காமாட்சி நகர் முதல்தெருவை சேர்ந்தவர் பத்மநாதன். இவருடைய மகன் வசந்த்சூர்யா (வயது 23). தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த வசந்த்சூர்யா தஞ்சை அருகே ரெட்டிபாளையம் நால்ரோட்டில் உள்ள கால்நடை மருத்துவமனையில் பயிற்சி டாக்டராகவும் பணியாற்றி வந்தாா்.

நேற்று முன்தினம் இரவு வசந்த்சூர்யா மற்றும் பயிற்சி டாக்டர்களான சதீஷ்குமார், சிவராஜ் ஆகிய 3 பேரும் மருத்துவமனையில் தங்கி இருந்தனர். இதில் சதீஷ்குமார், சிவராஜ் ஆகிய இருவரும் மருத்துவமனையில் உள்ள அறையில் தூங்கினர். வெளியே உள்ள ஹாலில் வசந்த்சூர்யா படுத்து இருந்தார்.

தூக்கில் பிணம்

நேற்று காலை ரெட்டிப்பாளையம் கால்நடை மருத்துவமனை வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள ஷெட்டில் உள்ள மேல் கம்பியில் வசந்த்சூர்யா தூக்கில் பிணமாக தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினா். விசாரணையின் போது வசந்த்சூர்யா படுத்திருந்த கட்டில் அருகே மதுபாட்டில் இருந்தது தெரியவந்தது.

கொலையா?, தற்கொலையா?

மேலும் அவர் பயன்படுத்தி வந்த செல்போனை போலீசார் கைப்பற்றினர். அதில் அவர் 'ஸ்கிரீன் லாக்' வைத்திருந்ததால் போலீசாரால் செல்போனை இயக்க இயலவில்லை. கணினி நிபுணர்கள் மூலம் செல்போனின் 'ஸ்கிரின் லாக்' திறக்கப்பட்டு செல்போனை ஆராய்ந்தால் கூடுதல் தகவல் கிடைக்கலாம் என்றும், அவரது பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு தான் உறுதியான தகவல் கிடைக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்த் சூர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story