உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் பாதிப்பு


உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் பாதிப்பு
x
திருப்பூர்


வங்கதேச ஆடைகள் இறக்குமதி அதிகரித்துள்ளதால் திருப்பூரில் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை வைத்துள்ளனர்.

வங்கதேச ஆடைகள்

பனியன் தொழில் நகரான திருப்பூரில் உள்நாட்டு ஆடை உற்பத்தி தொழில் வளர்ச்சிக்கு பிறகே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பின்னலாடை தொழில் வலுப்பெற்றது. உள்நாட்டு ஆடை உற்பத்தியில் ஈடுபட்ட பெரிய நிறுவனங்களே ஏற்றுமதிக்கு முன்னேறியது. வெளிமாநிலங்களுக்கு ஆடைகளை அனுப்பி வியாபாரம் செய்து வருகிறார்கள். உள்நாட்டு ஆடை தயாரிப்பாளர்கள் பிராண்டட் ஆடைகளை தயாரித்து வெளிமாநில சந்தையில் தனி சிறப்பை பெற்றனர். வெளிநாட்டு ஏற்றுமதிக்கு இணையாக உள்நாட்டு ஆடை வியாபாரமும் திருப்பூரில் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதிகம் இருப்பதால் பலதரப்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள்.

நூல் விலை உயர்வு காரணமாக பனியன் தொழில் உற்பத்தி முடங்கியதால் உள்நாட்டு வியாபாரமும் பெருமளவு பாதித்தது. இது ஒருபுறம் இருக்கையில் தற்போது வங்கதேச ஆடைகளின் அதிகரிப்பால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு இந்தியா, வங்கதேசத்துடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் அமைத்தது. அதன் விளைவாக வரியில்லாமல் வங்கதேச நாட்டில் இருந்து ஆயத்த ஆடைகள் அதிகளவு இந்தியாவுக்கு இறக்குமதியாகிறது.

இறக்குமதி அதிகரிப்பு

இந்திய பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் சீனா, வங்கதேசம், வியட்நாம் ஆகிய நாடுகள் போட்டி நாடுகளாக உள்ளன. தற்போதைய நிலையில் ஏற்றுமதி வர்த்தகத்தில் வங்கதேசம் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச ஆடை இந்தியாவுக்கு அதிகமாக இறக்குமதியாவதால் உள்நாட்டு ஆடை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கான ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி 2021-22-ம் ஆண்டு 5 மாதங்களில் ரூ.2 ஆயிரத்து 551 கோடியாக இருந்தது. அது நடப்பு ஆண்டில் 5 மாதங்களில் ரூ.3 ஆயிரத்து 795 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 48 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த உயர்வு என்பது திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு பேரிடியாக அமைந்து இருக்கிறது.

உள்நாட்டு பனியன் வர்த்தகம்

ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்த பிறகு ஆயத்த ஆடை வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி அதிகரித்துள்ளது. திருப்பூரில் தயாரிக்கும் ஆடைகளை விட வங்கதேச ஆடைகள் விலை குறைவாக கிடைப்பதால் மொத்த வியாபாரிகள் வங்கதேசத்தை நாடி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக உள்நாட்டு பனியன் வர்த்தகம் கேள்விக்குறியாகி வருகிறது.

மத்திய, மாநில அரசுகள் இனியும் காலம் கடத்தாமல் உரிய முன்னேற்பாடுகளை மேற்கொண்டால் மட்டுமே உள்நாட்டு ஆயத்த ஆடை மற்றும் பின்னலாடை வர்த்தகத்தை காப்பாற்ற முடியும் என்று திருப்பூரை சேர்ந்த உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காலம் கடத்தாமல் நடவடிக்கை

இதுகுறித்து டீமா சங்க தலைவர் முத்துரத்தினம் கூறும்போது, 'சீனாவில் இருந்து செயற்கை நூலிழை துணிகள் தயாரித்து வங்கதேசத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த இரு நாட்டுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. வங்கதேசத்தில் குறைந்த விலைக்கு ஆயத்த ஆடைகள் தயாரித்து, இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் இருப்பதால் வரியில்லாமல் ஆடைகளை அனுப்பி வைக்கிறது. இதன் காரணமாக திருப்பூரில் தயாரிக்கும் ஆடைகளை விட 30 முதல் 40 சதவீதம் விலை குறைவாக வங்கதேச ஆடைகள் கிடைக்கிறது.

இந்தியாவில் உள்ள பெரிய வர்த்தகர்கள் வங்கதேசத்தில் ஆர்டர் கொடுத்து இந்தியாவுக்கு ஆடைகளை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். இந்தியாவில் வாங்குவதை விட வங்கதேசத்தில் குறைந்த விலைக்கு ஆயத்த ஆடைகள் கிடைப்பதால் வர்த்தகம் கைமாறியுள்ளது. காதர்பேட்டை சந்தை வரை வங்கதேச ஆடைகள் வருகை தந்துவிட்டது. இதே நிலை நீடித்தால் திருப்பூரின் உள்நாட்டு ஆடை வர்த்தகம் வீழ்ச்சியடையும். மத்திய, மாநில அரசு இனியும் காலம் கடத்தாமல் வங்கதேச ஆடை இறக்குமதிக்கான வரிவிதிப்பு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்' என்றார்.


Next Story