உரிய ஆவணம் இல்லாததால்நிதி நிறுவன ஊழியரிடம் இருந்து ரூ.1¼ லட்சம் பறிமுதல்


உரிய ஆவணம் இல்லாததால்நிதி நிறுவன ஊழியரிடம் இருந்து ரூ.1¼ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 24 Jan 2023 7:30 PM GMT (Updated: 2023-01-25T01:01:03+05:30)

ரூ.1¼ லட்சம் பறிமுதல்

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும், நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகளும் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி ஈரோடு வெண்டிபாளையம் ரெயில்வே கேட் பகுதியில் நேற்று காலை நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரூரில் இருந்து ஈரோட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில், அவரிடம் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கரூரை சேர்ந்த கவின் (வயது 28) என்பதும், கரூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. ஆனால் பணத்துக்கு உரிய ஆவணம் அவரிடம் இல்லை.

கடன் வாங்கியவர்களிடம் பணத்தை வசூலிக்கும் வேலையில் ஈடுபட்டு வரும் கவின், சிலருக்கு கடன் கொடுப்பதற்காக பணத்தை எடுத்து வந்ததாக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 150-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த பணத்தை ஈரோடு தேர்தல் நடத்தும் அதிகாரியான மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஈரோடு மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்படும் என்றும், ஆவணங்களை காண்பித்து அந்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story