அம்மன் கோவில்களில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


அம்மன் கோவில்களில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா பாளையங்கோட்டை அம்மன் கோவில்களில் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா பாளையங்கோட்டை அம்மன் கோவில்களில் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

தசரா விழா கொடியேற்றம்

தென் மாநிலங்களின் பிரபல விழாக்களில் ஒன்றான நவராத்திரி தசரா விழா குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு அடுத்ததாக நெல்லை பாளையங்கோட்டையில் 12 சப்பரங்களுடன் சூரசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு தசரா விழாவின் தொடக்கமாக பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் நேற்று காலை 11 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்துக்கு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னா் பக்தி கோஷங்கள் முழங்க பூசாரிகள் கொடியை ஏற்றினர். முன்னதாக பாளையங்கோட்டை 8 ரதவீதிகளிலும் அமைந்துள்ள அம்மன் கோவில்கள் வழியாக கொடிப்பட்டம் வீதி உலாவாக எடுத்துவரப்பட்டது.

விரதம் தொடங்கினர்

இதேபோல் மற்ற அம்மன் கோவில்கள் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். கோவில்களில் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) முதல் பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன், பேராத்துசெல்வி, தூத்துவாரி அம்மன் உட்பட 12 கோவில்களில் அடுத்த 9 நாட்களும் அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவமும், அம்மன் கொலுவில் வீற்றிருக்கும் வைபவமும் நடக்கிறது.

வருகிற விஜயதசமி அன்று 12 சப்பரங்களில் அம்பாள் விதி உலாவும், அதை தொடா்ந்து சூரசம்ஹாரமும் நடைபெறுகிறது.

நெல்லை கொக்கிரகுளம் முத்தாரம்மன், புதுஅம்மன் கோவில்களிலும் தசரா விழா தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு தனித்தனியாக அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் முத்தாரம்மன், புதுஅம்மன் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.


Next Story