பொதுமக்களிடம் குறைகளை கேட்ட எடப்பாடி பழனிசாமி


பொதுமக்களிடம் குறைகளை கேட்ட எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 1 March 2023 7:30 PM GMT (Updated: 1 March 2023 7:30 PM GMT)
சேலம்

எடப்பாடி:-

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் எடப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகள் கேட்டு மனுக்களை பெற்றுக்கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், எடப்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று எடப்பாடி தொகுதிக்குட்பட்ட மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், எடப்பாடி, நெடுங்குளம், சிலுவம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தொடர்ந்து எடப்பாடி நகருக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, நகர அ.தி.மு.க செயலாளர் ஏ.எம் முருகன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து எடப்பாடி நெடுஞ்சாலைத்துறை பயணியர் ஆய்வு மாளிகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், கட்சி நிர்வாகிகளை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கட்சியின் வளர்ச்சி குறித்தும், அடுத்து வரும் தேர்தல் நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து அங்கு தன்னை சந்தித்து மனு கொடுக்க, கைக்குழந்தையுடன் வெயிலில் நின்றிருந்த பெண்ணை கண்ட எடப்பாடி பழனிசாமி, உடனடியாக அவரது பாதுகாவலர்கள் மூலம் அந்த பெண்ணை அழைத்து குறைகளை கேட்டு அறிந்தார்.

சொந்த கிராமம்...

தொடர்ந்து எடப்பாடி பகுதி மக்களிடம் குறைகள் கேட்டு மனுக்களை பெற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, நெடுங்குளம் வழியாக தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையம் பகுதிக்கு சென்றார்.

அங்குள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கிராம மக்களிடம் குறைகள் கேட்டு மனுக்களை பெற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து சேலம் சென்றார்.


Next Story