அ.தி.மு.க.வை அழிக்க முயற்சி செய்கிறார் எடப்பாடி பழனிசாமி


அ.தி.மு.க.வை அழிக்க முயற்சி செய்கிறார் எடப்பாடி பழனிசாமி
x

அ.தி.மு.க.வை அழிக்க முயற்சி செய்கிறார் எடப்பாடி பழனிசாமி

தஞ்சாவூர்

தன்னை காப்பாற்றிக்கொள்ள யாருடனோ ரகசிய உறவு வைத்துக் கொண்டு அ.தி.மு.க.வை அழிக்க முயற்சி செய்கிறார் எடப்பாடி பழனிசாமி என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஆர்.வைத்திலிங்கம் குற்றம் சாட்டினார்.

தஞ்சையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உறுதியாக இருக்கிறோம்

நான் திருமண நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தபோது தற்செயலாக சசிகலாவை சந்தித்தேன். இந்த சந்திப்பு யதார்த்தமான சந்திப்பு. அரசியல் விஷயமாக சந்திப்பதாக இருந்தால் நிச்சயம் உங்களிடம் சொல்லிவிட்டு தான் சந்திப்போம். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் எல்லோரும் அ.தி.மு.க. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

மூத்தவர், எம்.ஜி.ஆருடன் இருந்த ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன், தனிக்கட்சி வைத்துள்ள ஏ.சி.சண்முகம் உள்பட யாரெல்லாம் ஒதுங்கி இருக்கிறார்களோ? அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து இந்த இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்பது தான் எங்களது கருத்து. இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

ஆணவ போக்கு

இதில் டி.டி.வி.தினகரனும், சசிகலாவும் அடங்குவார்கள். ஓ.பன்னீர்செல்வம் மன்னிப்பு கேட்டாலும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதை எந்த கடைக்கோடி தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஏனென்றால், அவர் (எடப்பாடி பழனிசாமி) எப்படி அரசியலுக்கு வந்தார்?. முதல்-அமைச்சர் பதவியை பெற்றார்?. இந்த கட்சியை அபகரிக்க எப்படி துடிதுடித்து கொண்டிருக்கிறார்? என்பது கடைக்கோடி தொண்டன் வரைக்கும் தெரியும்.

நிச்சயம் அவரது ஆணவ போக்கிற்கு தொண்டர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். எங்களுக்கு ஒற்றுமை தேவை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இந்த இயக்கத்திற்கு பாடுபட்டவர்கள், துணையாக இருந்தவர்கள், இந்த இயக்கம் வளருவதற்கு தங்களையே அர்ப்பணித்து கொண்டவர்கள் ஆகிய அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும்.

தொண்டர்களின் எண்ணம்

மீண்டும் ஜெயலலிதா எண்ணப்படி ஆட்சிக்கு வர வேண்டும். 100 ஆண்டு காலம் இந்த கட்சி சிறப்பாக வலுவோடு இருக்க வேண்டும் என்பது தான் ஒவ்வொரு தொண்டர்களின் எண்ணம்.

அந்த எண்ணத்தை தான் நாங்கள் பிரதிபலித்துக்கொண்டு இருக்கிறோம். அண்ணன் ஓ.பன்னீர்செல்வமும் அதையே பிரதிபலித்துக்கொண்டு இருக்கிறார்.

அ.தி.மு.க.வை அழிக்க முயற்சி

எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சி வலுவாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து நான் சொல்லி வருகிறேன்.

ஆனால் இணைந்து செயல்பட மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி சொல்வதில் உள்நோக்கம் இருக்கிறது. யாருடனோ ரகசிய உறவு வைத்துக் கொண்டு தன்னை காப்பாற்றிக்கொள்ள இந்த கட்சியை அழிக்க முயற்சி செய்கிறார். அதை தொண்டர்கள் புரிந்து கொள்வார்கள்.

தி.மு.க.வுக்கு பாராட்டு

தொண்டர்களின் ஏகோபித்த கருத்து ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்பது தான். தி.மு.க. செயல்படுத்தும் திட்டங்கள் நல்ல திட்டங்களாக இருந்தால் பாராட்டுவோம். அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு ரூ.1,000 கொடுப்பதை வரவேற்கிறோம். அவர்களது நல்ல திட்டங்களை பாராட்டுகிறோம்.

விலையில்லா மடிக்கணினி,, தாலிக்கு தங்கம், கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா வழங்கினார். இதை மீண்டும் கொடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

பயம் இல்லை

சசிகலாவை நேரம் வரும்போது நானே சந்திப்பேன் என்று அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் சொல்லி இருக்கிறார். அதன்படி நேரம் வரும்போது, அவர் சந்திக்கும்போது உங்களிடம் சொல்லிவிட்டு சந்திப்பார். இதில் எங்களுக்கு பயம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story