மா மரங்களை சேதப்படுத்திய யானைகள்


மா மரங்களை சேதப்படுத்திய யானைகள்
x

வத்திராயிருப்பு அருகே மா மரங்களை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே மா மரம்ங்களை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.

மா சாகுபடி

வத்திராயிருப்பு அருகே மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, புலி, காட்டெருமை, காட்டுப்பன்றி, மிளா, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளான கான்சாபுரம், அத்திக்கோவில் ஆகிய பகுதிகளில் பல ஏக்கரில் மா, பலா, தென்னை, வாழை ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளனர்.

இந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் வனவிலங்குகள் அவ்வப்போது புகுந்து தென்னை, மா, பலா, வாழை உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக தற்போது மாங்காய் சீசன் என்பதால் மலைப்பகுதியில் இருந்து அடிவாரப்பகுதி நோக்கி வரும் காட்டு யானைகள் மா மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.

விவசாயிகள் அச்சம்

கடந்த ஒரு வாரமாக அத்திகோவில் பகுதியில் உள்ள விவசாயி முத்துராஜ் என்பவரது மாந்தோப்பிற்குள் புகுந்த காட்டு யானைகள் 30-க்கும் மேற்பட்ட மா மரங்களை உடைத்தும், வேரோடு சாய்த்தும் சேதப்படுத்தியுள்ளது.

இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து யானைகள் பயிர்கள், மரங்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், யானைகள் பயிர்கள் சேதப்படுத்துவதை தவிர்க்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story