களைகளை கட்டுப்படுத்த 'டிரோன்' மூலம் மருந்து தெளிக்கும் விவசாயிகள்


களைகளை கட்டுப்படுத்த டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் விவசாயிகள்
x

களைகளை கட்டுப்படுத்த ‘டிரோன்’ மூலம் மருந்து தெளிக்கும் விவசாயிகள்

திருவாரூர்

கோட்டூர்:

கோட்டூர் அருகே நேரடி நெல் விதைப்பு செய்த வயல்களில் களைகளை கட்டுப்படுத்த 'டிரோன்' மூலம் விவசாயிகள் மருந்து தெளித்து வருகிறார்கள். இதன் மூலம் செலவு மிச்சமாவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

குறுவை சாகுபடி

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதை ெதாடர்ந்து திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு பணிகள் மூலமாக குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள காரியமங்கலம், புழுதிக்குடி, இருள்நீக்கி, விக்கிரபாண்டியம், களப்பால் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நேரடி விதைப்பு முறையில் குறுவை சாகுபடி நடந்து வருகிறது.

'டிரோன்' மூலம் மருந்து தெளிப்பு

நேரடி நெல் விதைப்பு பணி நடைபெறும் வயல்களில் களைகளால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இத்தகைய வயல்களில் களைகளை கட்டுப்படுத்த விவசாயிகள் அதிக பணம் செலவிட வேண்டி உள்ளது.

இந்த நிலையில் 'டிரோன்' மூலம் களைக்கொல்லி மருந்தினை தெளித்து களைகளை கட்டுப்படுத்த வேளாண் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் பொன்னிவனம் உழவர் உற்பத்தியாளர் குழு 'டிரோன்' மூலம் களைக்கொல்லி மருந்துகளை தெளிக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது.

செலவு மிச்சம்

இதற்காக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.500 என்ற அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கைத்தெளிப்பான் கொண்டு களைக்கொல்லி மருந்து தெளிக்க ஆகும் செலவை விட 'டிரோன்' பயன்படுத்தி மருந்து தெளிப்பதற்கு ஆகும் செலவு குறைவாக இருப்பதாகவும், இதனால் சாகுபடி ெசலவு மிச்சமாவதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.

'டிரோன்' மூலமாக மருந்துகளை எளிதாகவும், ஒரே சீராகவும் தெளிக்க முடியும் என்பதால் களைகளை பெருமளவு கட்டுப்படுத்த முடிவதாகவும் விவசாயிகள் கூறுகிறார்கள்.


Next Story