குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு


குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
x

குற்றாலம் அருவிகளில் நேற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தென்காசி

தென்காசி:

குற்றாலம் அருவிகளில் நேற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

பலத்த மழை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த 3 நாட்களாக சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த பலத்த மழையால் குற்றாலம் மெயின் அருவியில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சுமார் 3½ மணி நேர தடைக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

வெள்ளப்பெருக்கு

இந்த நிலையில் நேற்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தனர். மதியம் சுமார் 1 மணி அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இதேபோல் ஐந்ருவியிலும் காலை 11 மணிக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் சிறு, சிறு கற்கள் வந்து விழுந்தன. இதனால் இங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

ஏமாற்றத்துடன் திரும்பினர்

இதேபோன்று சிற்றருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றிலும் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. குறைவாக தண்ணீர் விழும் புலியருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அங்கும் இரவில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதற்கிடையே மெயின் அருவியில் குளிக்க முடியாமல் வாகனங்களில் திரும்பியதாலும், வெளியூர்களில் இருந்து குளிப்பதற்காக ஏராளமானவர்கள் வாகனங்களில் வந்ததாலும் குற்றாலத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதை அவ்வப்போது போலீசார் சரிசெய்தனர்.



Next Story