10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது


10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது
x

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது.

பெரம்பலூர்

6-ந்தேதி அரசு பொதுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வுகளுக்கான செய்முறை தேர்வுகள் முடிந்து தற்போது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு நேற்று இயற்பியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடந்தது. பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) இயற்பியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்புக்கு அரசு பொதுத்தேர்வுகள் தொடங்குகிறது.

செய்முறை தேர்வு தொடக்கம்

10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை பெரம்பலூர் மாவட்டத்தில் 143 பள்ளிகளை சேர்ந்த 4,288 மாணவர்களும், 3,905 மாணவிகளும் என மொத்தம் 8,193 பேர் 41 மையங்களில் எழுதவுள்ளனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் 186 பள்ளிகளை சேர்ந்த 5,231 மாணவர்களும், 4,854 மாணவிகளும் என மொத்தம் 10,085 பேர் 58 மையங்களில் எழுதவுள்ளனர். இதையொட்டி 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது.

கண்காணிப்பு

அதன்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் சுழற்சி முறையில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அறிவியல் பாடத்தில் 25 மதிப்பெண்களுக்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகளில் இருந்து செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. செய்முறை தேர்வினை மற்ற பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் வந்து கண்காணித்தனர். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். வருகிற 24-ந் தேதி வரை செய்முறை தேர்வு நடக்கிறது.


Next Story