விமானத்தில் கவர்னர் தமிழிசைக்கு எதிராக கோஷம் - மாணவி சோபியா வழக்கில் அதிரடி தீர்ப்பு


விமானத்தில் கவர்னர் தமிழிசைக்கு எதிராக கோஷம் - மாணவி சோபியா வழக்கில் அதிரடி தீர்ப்பு
x
தினத்தந்தி 16 Aug 2023 8:24 AM GMT (Updated: 16 Aug 2023 11:54 AM GMT)

விமானத்தில் தமிழிசைக்கு எதிராக கோஷம் எழுப்பிய விவகாரத்தில் மாணவி சோபியா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

தூத்துக்குடியைச் சேர்ந்த லூயிஸ் சோபியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2018-ம் ஆண்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த விமானத்தில் பயணித்தேன். அந்த விமானத்தில் அப்போதைய தமிழக பாஜகவின் தலைவரும், தற்போதைய புதுவை, தெலுங்கானாவின் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜனும் பயணம் செய்தார். விமானத்தில் இருந்து இறங்கும்போது மத்திய அரசை விமர்சித்து நான் கோஷம் எழுப்பினேன்.

இதையடுத்து கோபமடைந்த தமிழிசை, என்னை மிரட்டும் நோக்கில் தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரது ஆதரவாளர்களும் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். மேலும் இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே பலமுறை விசாரணை செய்து நிலுவையில் இருந்தது. இதற்கிடையே சோபியா மீதான வழக்கில் புகார்தாரரான தமிழிசை, தற்போது கவர்னராக பதவி வகித்து வருவதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி இந்த வழக்கில் தூத்துக்குடி போலீசார், சென்னை சிட்டி போலீஸ் பயன்படுத்தக்கூடிய சட்ட பிரிவினை பயன்படுத்தி உள்ளனர். இது சென்னை, கோவை, மதுரை, காவல்துறையினர் மட்டுமே பயன்படுத்த முடியும். தூத்துக்குடி போலீசார் இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியாது. அதற்கான அதிகாரம் இல்லை என வாதிட்டார். இதனை பதிவு செய்த நீதிபதி தனபால், சோபியா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.


Next Story