பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அவதிக்குள்ளாகும் நோயாளிகள்
பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறையால் அறுவை சிகிச்சை பிரிவு மூடியே வைக்கப்பட்டுள்ளதால் போதிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இங்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று நோயாளிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறையால் அறுவை சிகிச்சை பிரிவு மூடியே வைக்கப்பட்டுள்ளது. இதனால் போதிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இங்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று நோயாளிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
பணியாளர் பற்றாக்குறை
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக இருப்பது பாப்பிரெட்டிப்பட்டி. தர்மபுரி-சேலம் மாவட்டங்களின் இணைப்பு பகுதியாக உள்ள பாப்பிரெட்டிப்பட்டியில் பொதுமக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய கடந்த 1972-ம் ஆண்டு அரசு குடும்ப நல மருத்துவமனை தொடங்கப்பட்டது. 1982-ம் ஆண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக புதிய கட்டிடங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட இந்த மருத்துவமனை கடந்த 1997-ம் ஆண்டு தாலுகா ஆஸ்பத்திரியாக மேம்படுத்தப்பட்டது.
இந்த ஆஸ்பத்திரியை சார்ந்து சித்தேரி, மூக்காரெட்டிப்பட்டி, காளிப்பேட்டை, பையர்நத்தம், பொம்மிடி, பூதநத்தம், வத்தல்மலை ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. தினமும் கடத்தூர், தாளநத்தம், பொம்மிடி, மஞ்சவாடி, மோளையானூர், மெணசி, ஏற்காடு பின்புறமுள்ள மாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து புறநோயாளிகள் 700-க்கும் மேற்பட்டோர் இந்த ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். இங்கு டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் என குறைந்தபட்சம் 32 பேர் பணிபுரிய வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு 7 டாக்டர்கள், 6 செவிலியர்கள், 4 உதவியாளர்கள், 1 பிரேத பரிசோதனை உதவியாளர் என 18 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்கள். இதனால் இங்கு மருத்துவ பணியாளர் பற்றாக்குறை உள்ளது.
உயிரிழப்பு
இங்கு சராசரியாக 100-க்கும் மேற்பட்டோர் உள்நோளிகளாக பல்வேறு சிகிச்சைகளை பெற சேர்க்கப்படுகிறார்கள். இதனால் இந்த மருத்துவமனையில் குறைந்த பட்சம் 65 படுக்கைகள் தேவைப்படுகிறது. ஆனால் இப்போது 32 படுக்கைகள் மட்டுமே உள்ளன. இதனால் பல நேரங்களில் இந்த மருத்துவமனைக்கு கூடுதலாக வரும் உள் நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லாமல் அவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சை பெறும் சூழல் ஏற்படுகிறது.
இங்கு நரம்பியல் சிகிச்சை தேவைப்படுபவருக்கு டாக்டர்கள் இல்லை. ஸ்கேன், எக்ஸ்ரே செய்யும் எந்திர வசதிகள் உள்ளன. ஆனால் இவற்றை பயன்படுத்தி சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லை. இதேபோல் இங்கு மயக்கவியல் பிரிவு உள்ளது. ஆனால் அதற்குரிய டாக்டர் இல்லை. ஆபரேஷன் தியேட்டர் வசதி உள்ளது. ஆனால் அறுவை சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் இல்லை. இதனால் அறுவை சிகிச்சை அரங்கு மூடியே கிடக்கிறது.
இதனால் இந்த ஆஸ்பத்திரிக்கு வரும் கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக தர்மபுரி, சேலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். குறிப்பாக ஏற்காடு மலை கிராமங்களில் இருந்து இந்த மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வருகிறார்கள். இங்கு மகப்பேறு சிகிச்சை டாக்டர் இல்லாத காரணத்தினால் சேலம், தர்மபுரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் போது சிகிச்சை கிடைப்பதில் ஏற்படும் காலதாமதத்தால் செல்லும் வழியிலேயே கர்ப்பிணிகள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
கூடுதல் டாக்டர்கள்
இதுதொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சமூக ஆர்வலர் ராஜராம் கூறியிருப்பதாவது:-
பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா மருத்துவமனை பெயரளவிற்கு மட்டுமே உள்ளது. நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதி இல்லை. அவசர சிகிச்சை பெற சென்றால் உடனடியாக தர்மபுரிக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால் பிரசவ வலியோடு வரும் கர்ப்பிணிகளுக்கு உரிய நேரத்தில் இங்கு சிகிச்சை கிடைப்பதில்லை. குடல் அறுவை உள்ளிட்ட சிகிச்சை செய்து கொள்ள தர்மபுரி, சேலம் அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் இப்பகுதியில் வாழும் ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே அரசு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும். அரூர்-சேலம் நெடுஞ்சாலையில் அதிகளவில் விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக மஞ்சவாடி கணவாய் பகுதியில் விபத்து ஏற்பட்டு அவசர சிகிச்சை பெற வரும் போது முதலுதவி மட்டுமே அளிக்கப்படுகிறது. பின்பு மேல் சிகிச்சைக்காக அரூர், தர்மபுரி, சேலம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் செல்லும் போது வழியிலேயே உயிரிழக்கும் நிலை உள்ளது. இங்கு எனவே அவசர சிகிச்சை தேவையை மேம்படுத்த வேண்டும். கூடுதலாக அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் நியமிக்க வேண்டும்.
தரம் உயர்த்த வேண்டும்
பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த முல்லைமுருகன்:-
பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிறு குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும்போது உள்நோயாளியாக சேர முடியாமல் தவிக்கின்றனர். இங்கு போதுமான படுக்கை வசதி இல்லை. படுக்கைகள் கூடுதலாக அமைக்க வேண்டும். இங்கு வரும் மக்களுக்கு ஓரளவு சிகிச்சை பெற முடியும். மாவட்டத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ள பாப்பிரெட்டிப்பட்டி மருத்துவமனைக்கு 3 ஏக்கருக்கு மேல் இடவசதி உள்ளது. கூடுதல் சிகிச்சை பிரிவுகளை இங்கு தொடங்கி மாவட்ட அளவிலான மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். அதிக அளவில் பழங்குடியின மக்கள் இங்கு சிகிச்சை பெற வருகிறார்கள். இந்த மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்களை நியமித்து வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
தனி வார்டு
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சாந்தி:-
இந்த ஆஸ்பத்திரியில் பெண்களுக்கென்று மருத்துவம் பார்க்க பெண் டாக்டர்களை நியமிக்க வேண்டும் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லை. இதனால் தனியார் மருத்துவமனைக்கு சென்று பணம் செலுத்தி மருத்துவம் பார்த்து கொள்ளும் நிலை உள்ளது. எலும்பு பிரிவு டாக்டர் இல்லாததால் அது சம்பந்தமான சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. ஆகவே அதற்கான டாக்டர்களை நியமிக்க வேண்டும். பெண்களுக்கு என்று மகப்பேறு மருத்துவ தனி வார்டு உருவாக்கப்பட வேண்டும். இந்த மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.