'பெண்களுக்கு வாய்ப்பளிக்காத நாடு முன்னேறாது' கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு


பெண்களுக்கு வாய்ப்பளிக்காத நாடு முன்னேறாது கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
x

பெண்களுக்கு வாய்ப்பளிக்காமல் அவர்களை பின்னுக்கு தள்ளும் நாட்டில் முன்னேற்றம் இருக்காது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், 'எண்ணித் துணிக' என்ற தலைப்பில் தமிழக பெண் ஆளுமைகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடிய நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்ச்சியில் மருத்துவம், விளையாட்டு, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

ஒவ்வொரு பெண்ணுமே இடையூறுகளை கடந்து வராமல் சாதனைகளை சந்தித்து இருக்க முடியாது. பெண்களுடன் தோழமையுடன் சமுதாயம் இருப்பதில்லை. ஒரு நாடோ அல்லது சமுதாயமோ முன்னேற வேண்டும் என்றால் அங்குள்ள பெண்கள் முன்னேறாமல் அவை சாத்தியம் அல்ல. பெண்களுக்கு வாய்ப்பளிக்காமல் அவர்களை பின்னுக்கு தள்ளும் நாட்டில் முன்னேற்றம் இருக்காது.

கல்வியில் பெண்கள் அதிக பட்டம்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு முன்பே இங்கு ஆண்களுக்கு இணையாக பெண்கள் கல்வி கற்றுள்ளனர். ஏனோ தெரியவில்லை, பின்னர் ஒரு கட்டத்தில் அவர்கள் பல நிலைகளிலும் பின்னுக்கு தள்ளப்பட்டு, வீட்டு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டனர்.

தற்போது கல்வியில் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக பட்டம் பெறுவதோடு, அதிக மதிப்பெண்களை பெறுவதும் பெண்களாக உள்ளனர்.

பாதுகாப்புப் படையில் சேர்வது, புதிய தொழில் நிறுவனம் தொடங்குவது என பெண்கள் பலரும் அனைத்து துறைகளிலுமே முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் டாக்டர் கமலா செல்வராஜ், ஒலிம்பிக் வீராங்கனை இளவேனில் மற்றும் பல துறைகளில் சாதனை படைத்த பெண்கள் 7 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நினைவுப் பரிசு வழங்கினார்.


Next Story