விபத்து நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்து நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 1 March 2023 10:22 AM GMT (Updated: 1 March 2023 1:40 PM GMT)

விபத்து நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டு பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

ஆரணி

விபத்து நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டு பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்தில் பலி

சேத்துப்பட்டை அடுத்த மேலத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏழுமலையின் மகன் சத்யராஜ் (வயது 22). இவர் கடந்த 2010-ம் ஆண்டு காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அரசு பஸ் மோதி பலியானார்.

இது சம்பந்தமாக கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த சத்யராஜின் தாயார் குமாரி அம்மாள் இழப்பீடு தொகை வழங்கக்கோரி ஆரணி சப்-கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார்.

அதனை ஆரணி சப்-கோர்ட்டு நீதிபதி தாவூத் அம்மாள் விசாரித்து சத்யராஜ் குடும்பத்துக்கு ரூ.9 லட்சத்து 11 ஆயிரத்தை 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் நஷ்டஈடு வழங்கப்படாததால் குமாரி அம்மாள் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

அவரது முறையீடு லோக் அதாலத் என்னும் மக்கள்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது நஷ்டஈட்டுத்தொகை ரூ.11 லட்சத்து 75 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி ரூ.11 லட்சத்து 41 ஆயிரத்து 178 செலுத்தப்பட்டது. மீதமுள்ள தொகை வழங்கப்படாமல் நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது.

உத்தரவு

இது சம்பந்தமாக சத்யராஜின் தாயார் குமாரி அம்மாள் ஆரணி சப்-கோர்ட்டில் மீண்டும் முறையீடு செய்தார். அதனை விசாரித்த நீதிபதி தாவூத் அம்மாள், வேலூரில் இருந்து விழுப்புரம் செல்லக்கூடிய அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று பகல் 11.20 மணியளவில் வேலூரில் இருந்து ஆரணி வழியாக விழுப்புரம் செல்லும் அரசு பஸ் ஆரணி புதிய பஸ் நிலையம் வந்தது.

அந்த பஸ்சை குமாரி அம்மாளின் வக்கீல்கள் அரிநாத், பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் கோர்ட்டு அமீனா ஜப்தி செய்தார். இதனையடுத்து பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர்.

அப்போது அங்கு வந்திருந்த அரசு பஸ் பணிமனை தொழிற்சங்க நிர்வாகி காசிலிங்கம், பஸ்சை விடுவியுங்கள். ஒரு வாரத்தில் நான் பணம் தர ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

ஆனால் பஸ்சில் ஜப்தி செய்யப்பட்டதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டுவிட்டது. எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் வந்து சொல்லுங்கள் என வக்கீல்கள் கூறினர். அதன்பின் கோர்ட்டுக்கு பஸ் கொண்டு செல்லப்பட்டது. பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டு அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story