உரிமம் இன்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது
உடுமலை அருகே உரிமம் இன்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வன விலங்குகளை வேட்டையாடினார்களா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
உரிமம் இல்லாத துப்பாக்கி
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குமரலிங்கம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மொகமது ஹக்கீம் மற்றும் போலீஸ்காரர் மதுரைவீரன் ஆகியோர் நேற்று அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சாமராயப்பட்டியில் இருந்து பெருமாள்புதூர் பிரிவு செல்லும் வழியில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்களில் ஒருவர் ஏதோ ஒரு பொருளை தூக்கி இருட்டுக்குள் வீசினார். உடனே போலீசார் அந்த பொருளை தேடி எடுத்துப்பார்த்த போது, அது உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கி என்பது தெரிய வந்தது.
காட்டுப்பன்றிகளை வேட்டையாட
விசாரணையில், அவர்கள் சாமராயப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி மகன் துர்க்கைவேல் (வயது 39), காளியப்பன் மகன் சிவசக்தி (20) மற்றும் பெருமாள்புதூரைச் சேர்ந்த காளியப்பன் மகன் மாசாணிமுத்து (23) என்பது தெரிய வந்தது.
இதில் துர்க்கைவேல், காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக கோவையைச் சேர்ந்த சதீஷ் என்ற கோபாலகிருஷ்ணன் என்பவரிடமிருந்து ரூ.14 ஆயிரம் கொடுத்து இந்த உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கியை வாங்கியது தெரியவந்தது.
3 பேர் கைது
இதையடுத்து அவர்களிடமிருந்த மோட்டார் சைக்கிள், ஒரு நாட்டுத்துப்பாக்கி, 3 தோட்டாக்கள் மற்றும் 2 டார்ச் லைட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் துப்பாக்கியை விற்பனை செய்த சதீஷ் என்ற கோபாலகிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.
உடுமலை அருகே உரிமம் இல்லாத நாட்டுப் துப்பாக்கியுடன் 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இவர்கள் வன விலங்குகளை வேட்டையாடியுள்ளனரா என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.