60 ஆண்டுகளாக குடியிருக்கும் வீடுகளை அகற்றக்கூடாது


60 ஆண்டுகளாக குடியிருக்கும் வீடுகளை அகற்றக்கூடாது
x

அழகப்பபுரம் பகுதியில் 60 ஆண்டுகளாக குடியிருக்கும் வீடுகளை அகற்றக்கூடாது என்று கலெக்டர் அரவிந்திடம் பொதுமக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

அழகப்பபுரம் பகுதியில் 60 ஆண்டுகளாக குடியிருக்கும் வீடுகளை அகற்றக்கூடாது என்று கலெக்டர் அரவிந்திடம் பொதுமக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

பொதுமக்கள் மனு

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள லூயி பிரெயிலி கூட்ட அரங்கில் திங்கட்கிழமையான நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. கலெக்டர் அரவிந்த் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார். அப்போது பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். அழகப்பபுரம் அருகில் உள்ள பொட்டல்குளம் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று திரண்டு வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சிறிய கிராமம் பொட்டல்குளம். இந்த கிராமத்தில் வேளாங்கண்ணி நகருக்கு வடக்கு பகுதியில் 25 அடி அகலம் கொண்ட தண்ணீர் செல்லும் கால்வாயும், நடுப்பகுதியில் 30 அடி அகலம் கொண்ட ரோடும், தெற்கு பகுதியில் 45 ஆண்டுகளுக்கு முன் அழகப்பபுரம் பேரூராட்சியில் கட்டித்தரப்பட்ட கழிவு நீர் ஓடையும் செல்கிறது. இந்த கழிவு நீர் ஓடைக்கு தெற்கு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

காப்பாற்ற வேண்டும்

இந்தநிலையில் மயிலாடி நீர்வளத்துறை உதவி பொறியாளரிடமிருந்து எங்கள் குடியிருப்பு பகுதியில் இருக்கும் 15 வீடுகளும், மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட மிகவும் பிரசித்தி பெற்ற அன்னை வேளாங்கண்ணி ஆலயமும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று அடையாளமிட்டு, கடிதமும் அனுப்பி உள்ளனர். பழிவாங்கும் நோக்கத்தில் எங்கள் பகுதியை மட்டும் அகற்ற முயற்சி செய்து வருகிறார்கள். ஒரு தனி நபரின் தூண்டுதலின்பேரில் ஆக்கிரமிப்பு பகுதி என்று நாங்கள் 60 ஆண்டுகள் அமைதியாக வாழ்ந்து வரும் எங்களை காலி செய்ய சொல்வது மிகுந்த வேதனையை அளிக்கிறது. எங்கள் பகுதியில் இருக்கும் குடியிருப்பால் நீர் நிலைக்கோ, பொதுமக்களுக்கோ, போக்குவரத்துக்கோ எந்த பாதிப்பும் இல்லை. எனவே வீடுகளையும், ஆலயத்தையும் இடிக்க உருவாக்கப்பட்டு இருக்கும் உத்தரவை ரத்து செய்து நிரந்தர தீர்வு தந்து எங்கள் குடும்பங்களையும், வாழ்வாதாரத்தையும் காப்பாற்றிட கேட்டுக்கொள்கிறோம்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இடுகாட்டை மீட்க வேண்டும்

தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க மாநில செயலாளர் ராமதாஸ் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தோவாளை தாலுகா திடல் ஊராட்சிக்கு உட்பட்ட ரெத்தினபுரத்தில் சுமார் 250 தலித் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த ஊரின் தெற்கு பகுதியில் ஆதிதிராவிட மக்கள் மட்டும் பயன்படுத்தி வந்த சுமார் 300 ஆண்டு பழமையான இடுகாட்டை தலித் மக்களிடம் இருந்து அபகரிக்கும் நோக்கில், தலித் மக்களின் இடுகாட்டில் இலவச வீட்டு மனை கொடுக்க முயற்சிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இடுகாட்டை மீட்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நெய்யூரை அடுத்த ஆலங்கோடு அருகே உள்ள கொக்கோடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், "எங்கள் ரேஷன் கார்டுகளில் என்.பி.எச்.எச். (முன்னுரிமை இல்லாதது) என உள்ளதை பி.எச்.எச். (முன்னுரிமை உள்ளது) என மாற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்" எனக்கூறியுள்ளனர்.


Next Story