பொங்கல் தொகுப்பில் குறைபாடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம் - கலெக்டர் அனீஷ் சேகர் தகவல்


பொங்கல் தொகுப்பில் குறைபாடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம் - கலெக்டர் அனீஷ் சேகர் தகவல்
x
தினத்தந்தி 9 Jan 2023 8:35 PM GMT (Updated: 2023-01-10T16:16:48+05:30)

பொங்கல் தொகுப்பில் குறைபாடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

மதுரை


பொங்கல் தொகுப்பில் குறைபாடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

கூட்ட நெரிசல்

மதுரை மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள பாண்டியன் கூட்டுறவு பண்டக சாலையில் நேற்று நடந்தது. மேயர் இந்திராணி முன்னிலை வகித்தார். கலெக்டர் அனீஷ் சேகர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:- பொதுமக்கள் அனைவரும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்தொகையுடன் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு அடங்கிய தொகுப்புகளை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 1,389 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 9 லட்சத்து 30 ஆயிரத்து 295 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு ரூ.102.98 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன. இதில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள 1,783 குடும்ப அட்டைதாரர்களும் அடங்குவார்கள்.

பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்குதல் தொடர்பாக ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்த்திடும் நோக்கில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தரமான பொருட்கள் வழங்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் தரக்கட்டுப்பாடு ஆய்வு செய்து வினியோகம் செய்யப்படுகிறது.

கட்டுப்பாட்டு அறை

மாவட்டத்தில் 13-ந் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புகள் முழுமையாக வழங்கிட திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்குதல் தொடர்பாக குறைபாடு ஏதேனும் இருந்தால் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறையை 0452-2546127 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் உதவி கலெக்டர் (பயிற்சி) திவ்யான்ஷூநிகம், இணைப்பதிவாளர்கள் குருமூர்த்தி (கூட்டுறவு சங்கங்கள்), பிரியதர்ஷினி (பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை), மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஆறுமுகம், மாநகராட்சி துணை கமிஷனர் முஜிபூர் ரகுமான், மாவட்ட வழங்கல் அலுவலர் முருகசெல்வி, மாநகராட்சி மண்டலத்தலைவர் சரவண புவனேஸ்வரி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story