மதுரை கோட்ட ரெயில்வே வருமானம் 80.67 சதவீதமாக அதிகரிப்பு


மதுரை கோட்ட ரெயில்வே வருமானம் 80.67 சதவீதமாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 14 Jan 2023 6:45 PM GMT)

மதுரை கோட்ட ரெயில்வே வருமானம் 80.67 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மதுரை

தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட மதுரை கோட்டத்தில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் மூலம் கணிசமான வருமானம் வருகிறது. இதற்கிடையே, கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் (2022) வரையிலான மதுரை கோட்டத்தின் மொத்த வருமானம் 80.67 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த வருடம் (ஏப்ரல் 2021-டிசம்பர் 2021) இதே காலகட்டத்தில், பயணிகள் போக்குவரத்து மூலம் ரூ.280.80 கோடி வருமானம் கிடைத்தது. தற்போது 78 சதவீதம் அதிகரித்து ரூ.502.05 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.191.44 கோடி வருமானம் வந்த சரக்கு போக்குவரத்து 27 சதவீதம் அதிகரித்து இந்த ஆண்டு ரூ.242.60 கோடியாக உயர்ந்துள்ளது. மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில்களில் கடந்த ஆண்டில் சுமார் 92 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த ஆண்டு சுமார் 24 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.. சென்ற வருடம் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பயணிகளிடமிருந்து ரூ.654.41 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்கள், பார்சல் கட்டணம் செலுத்தாமல் சரக்குகளை கொண்டு சென்றவர்கள், ரெயில் பெட்டிக்குள் சிகரெட் பிடித்தவர்கள், ரெயில் நிலைய வளாகத்தில் எச்சில் துப்பியவர்கள் ஆகியோரிடமிருந்து ரூ.834 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டங்களை உள்ளடக்கிய தென்னக ரெயில்வே மண்டலம், கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.2,659 வருமானம் ஈட்டியுள்ளது. இது ரெயில்வே வாரியம் நிர்ணயித்த இலக்கை விட 15.09 சதவீதம் கூடுதலாகும். கடந்த மாதம் மட்டும் சரக்கு போக்குவத்து மூலம் ரூ.314 கோடி வருமானம் கிடைத்துள்ளது. பயணிகள் போக்குவரத்து மூலம் ரூ.4,689 கோடி வருமானமாக கிடைத்துள்ளது. அதாவது, முன்பதிவு, சாதாரண டிக்கெட், புறநகர் மின்சார ரெயில்கள், அபராதம் என அனைத்து பிரிவின் மூலம் இந்த வருமானம் கிடைத்துள்ளது. இது ரெயில்வே வாரியம் நிர்ணயித்த இலக்கை விட 12.4 சதவீதம் அதிகமாகும். கடந்த மாதம் மட்டும் ரூ.528 கோடி வருமானமாக கிடைத்துள்ளது.


Next Story