மாற்றுத் திறனாளிகள் வாழ்வின் தரத்தை உயர்த்த புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது


மாற்றுத் திறனாளிகள் வாழ்வின் தரத்தை உயர்த்த புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது
x

மத்திய அரசு மாற்றுத் திறனாளிகள் வாழ்வின் தரத்தை உயர்த்த புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று மத்திய மந்திரி நாராயணசாமி கூறினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

மத்திய அரசு மாற்றுத் திறனாளிகள் வாழ்வின் தரத்தை உயர்த்த புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று மத்திய மந்திரி நாராயணசாமி கூறினார்.

சமூக வலுவூட்டல் முகாம்

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத் திறனாளிகள் நலப்பிரிவு சார்பில் சமூக வலுவூட்டல் முகாம் என்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் மாபெரும் முகாம் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது. சி.என்.அண்ணாதுரை எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் முருகேஷ் முன்னிலை வகித்தார். கவுரவ விருந்தினராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பேசினார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:-

தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தான் அந்த துறையை முதல்- அமைச்சரே வைத்து கொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

ஊனமுற்றோர் என சொல்லும்போது அவர்களது மனம் புண்படும். இதனால் அவர்களது மனதை ஊனமாக்க காரணமாக இருக்கக்கூடாது என்பதற்காக அவர்களை மாற்றுத்திறனாளிகள் என முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி அழைத்தார். நல்ல நிலையில் இருப்பவர்களை விட மாற்றுத்திறனாளிகளுக்கு ஆற்றல், திறமை அதிகம் என அவர் பாராட்டி உள்ளார்.

முக்கியத்துவம்

பஸ்களில் இலவச பயணம், உதவித் தொகை, மின்சார ஸ்கூட்டர், மின் மோட்டாருடன் தையல் எந்திரம் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி, மாற்றுத்திறனாளிகளுக்கு தனித் துறை மற்றும் நலவாரியம் உருவாக்கி கொடுத்துள்ளார்.

இந்தியாவில் தமிழகத்தில் தான் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மத்திய இணை மந்திரி நாராயணசாமி பெற்று வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்..

219 மருத்துவமனைகள்

இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை மந்திரி அ.நாராயணசாமி கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு உபகரணங்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மத்திய அரசின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை 716 மாவட்டங்களில் வழங்கப்பட உள்ளது. தீன்தயாள் மாற்றுத் திறனாளிகள் புனர்வாழ்வு திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 83 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.553 கோடியே 14 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டில் ரூ.2 கோடியே 14 லட்சத்து 86 ஆயிரம் செலவில் 8 ஆயிரத்து 498 மாற்றுத் திறனாளிகள் பயனடைந்து உள்ளனர். மத்திய அரசு திட்டத்தின் மூலம் ரூ.533 கோடியே 59 லட்சம் மதிப்பில் 1314 கட்டிடங்களில் சாய்தள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் 30 அரசு அலுவலகங்களில் ரூ.46 கோடியே 9 லட்சம் மதிப்பில் சாய்தளம் வசதிக்காக விடுவிக்கப்பட்டு உள்ளது. 35 சர்வதேச விமான நிலையங்களிலும், 55 உள்நாட்டு விமான நிலையங்களிலும் சாய்தள வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய 219 மருத்துவமனைகள் நிறுவப்பட்டு உள்ளது. இதுவரை 4170 பேருக்கு செவித்திறன் குறைப்பாட்டை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதில் 8 அறுவை சிகிச்சைகள் தமிழ்நாட்டில் நடைபெற்று உள்ளது.

ரூ.2 கோடியில் உபகரணங்கள்

மத்திய அரசு மாற்றுத் திறனாளிகள் வாழ்வின் தரத்தை உயர்த்த புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சமூக பங்குடன் நாம் அனைவரும் மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டிற்கு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மத்திய அரசின் அலிம்கோ நிறுவனத்தினரால் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் பல்வேறு மருத்துவ முகாம்கள் மூலம் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 653 பெண்கள், 1399 ஆண்கள் என 2052 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 கோடியே 7 லட்சத்து 73 ஆயிரத்து 146 மதிப்பிலான 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, காதொலி கருவி, நடைபயிற்சி உபகரணம், ஊன்றுகோல் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாநில தடகள சங்கத் தலைவர் எ.வ.வே.கம்பன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், அம்பேத்குமார், ஜோதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, துணைத்தலைவர் ரமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி நன்றி கூறினார்.


Next Story