தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 48 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு புத்தாக்க பயிற்சி


தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 48 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு புத்தாக்க பயிற்சி
x

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 48 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு புத்தாக்க பயிற்சி கொடுக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 48 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

புத்தாக்க பயிற்சி

தூத்துக்குடியில் கால்நடை உதவி மருத்துவர்களுக்கு கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி சு.ஜவஹர் தலைமையில் புத்தாக்க பயிற்சி நடந்தது.

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கூட்ட அரங்கில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 48 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி சு.ஜவஹர் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார்.

பயிற்சியை தொடங்கி வைத்து பின்னர் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி சு.ஜவஹர் பேசியதாவது:-

முதன்மை மாநிலம்

தமிழக கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. 20-வது கால்நடை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 1 கோடி பசு மாடுகளும், 5 லட்சம் எருமை மாடுகளும், 1.43 கோடி செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகளும், 13 கோடி கோழியினங்களும் உள்ளன. கிராமப்புற ஏழை கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மருத்துவ சேவையை இலவசமாக வழங்கி கிராமிய பொருளாதாரத்தை பெருக்குவதில் கால்நடை பராமரிப்புத்துறை மிகச்சிறந்த பங்களிப்பைச் செய்து வருகிறது.

தமிழக அரசு சிறப்பு திட்டங்கள் மூலம் விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் விலையில்லா நாட்டுக்கோழிகளை கிராமப்புற ஏழைமகளிருக்கு வழங்குகிறது. இதன் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமும், கிராமிய பொருளாதார நிலையும் உயர்கிறது. தமிழக வேளாண் மொத்த உற்பத்தியில் கால்நடை வளர்ப்பு சுமார் 41 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.

கால்நடை உதவி மருத்துவர்கள்

தமிழக கால்நடை பராமரிப்புத்துறையில் 3 ஆயிரத்து 30 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களில் ஆயிரத்து 141 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் பல்வேறு நீதிமன்ற வழக்குகளால் கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பபடாமல் இருந்தது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அரசு கூடுதல் செயலாளர் ஆகியோரின் தொடர் முயற்சியால் அனைத்து சட்ட சிக்கல்களும் தீர்க்கப்பட்டு, நீதிமன்ற ஆணை பெறப்பட்டு, ஆயிரத்து 89 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்பட்டு உள்ளது.

புத்தாக்க பயிற்சி

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், புதிதாக பணியில் சேர்ந்த கால்நடை உதவி மருத்துவர்களை ஊக்கப்படுத்தி துறையின் செயல்பாடுகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கும் புத்தாக்க பயிற்சி நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் தூத்துக்குடியில் புதிதாக பணியில் சேர்ந்த 48 கால்நடை உதவி மருத்துவர்களை ஊக்கப்படுத்த இந்த புத்தாக்க பயிற்சி நடக்கிறது. மேலும் 20-வது கால்நடை கணக்கெடுப்பின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடு, மாடு, கோழிகள் என மொத்தம் 12 லட்சத்து 37 ஆயிரத்து 764 கால்நடைகள் உள்ளன. இந்த கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிப்பது குறித்து வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் இந்த பயிற்சி முகாமில் வழங்கப்பட்டது என்று பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய துணைவேந்தர் சுகுமார், கால்நடை பராமரிப்புத்துறை தூத்துக்குடி மண்டல இணை இயக்குநர் ராஜன் மற்றும் மருத்துவர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story