தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு


தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
x

கடலூரில் தனியார் பள்ளி வாகனங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டன. இதில் இயக்குவதற்கு தகுதி இல்லாத 7 பஸ்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

கடலூர்

வாகனங்கள் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மாணவர்களை அழைத்து வருவதற்காக தனியார் பள்ளியினர் வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக கடலூர் வட்டார போக்குவரத்து கழகத்துக்குட்பட்ட 93 பள்ளிக்கூடங்களில் மொத்தம் 297 வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் அந்த வாகனங்கள், மாணவர்கள் பயணம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளதா? என்று ஆய்வு செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கடலூர், நெய்வேலி, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படும் 297 வாகனங்களை மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு வரவழைத்தனர். பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர், கடலூர் கல்வி மாவட்ட அலுவலர் கவுசர் ஆகியோர் முன்னிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முகுந்தன், பிரான்சிஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.

93 தனியார் பள்ளிகள்

இதுபற்றி வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் கூறுகையில், கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 93 தனியார் பள்ளிகள், 297 வாகனங்களை மாணவர்களை பள்ளிகளுக்கு அழைத்து வருவதற்காக பயன்படுத்துகின்றன. இந்த வாகனங்கள் முறையாக தகுதிச்சான்று பெற்றிருக்கின்றனவா? விபத்து சமயங்களில் மாணவர்கள் அவசரமாக வெளியேற வாகனங்களில் அவசர வழி உள்ளதா? மாணவர்கள் வெளியே தலையை நீட்டுவதை தடுக்க ஜன்னல் கம்பிகள் நெருக்கமாக இருக்கிறதா? டிரைவர் கேபின் தனியாக அமைக்கப்பட்டுள்ளதா? கதவுகளுக்கு பூட்டு உள்ளதா?, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா?, ஜி.பி.எஸ். கருவியுடன் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்கிறோம். இதில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்ல எவ்வித தகுதியும் இல்லாத 7 வாகனங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பஸ் டிரைவர்கள், ஒரு வாரத்திற்குள் மீண்டும் வாகனத்தை ஆய்வுக்கு உட்படுத்தி, தகுதி சான்றிதழை கொடுத்து மீண்டும் இயக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

செயல்விளக்கம்

முன்னதாக கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள், தீத்தடுப்பு குறித்து தனியார் பள்ளி வாகனங்களின் டிரைவர்களுக்கு செயல்விளக்க பயிற்சி அளித்தனர். மேலும் அனைத்து வாகன டிரைவர்களுக்கும் கண் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.


Next Story