நெல் அறுவடை பணி தீவிரம்
எடப்பாடி:-
எடப்பாடி அருகே காவிரி பாசனப்பகுதிகளில் நெல் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. மகசூல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல் சாகுபடி
எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லுக்குறிச்சி, மோளப்பாறை, நெடுங்குளம், கோனேரிப்பட்டி, உள்ளிட்ட காவிரி பாசனப் பகுதிகளில் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு பொன்னி, வெள்ளை பொன்னி, அனுஷ்கா உள்ளிட்ட உயர்வகை நெட்டை ரக நெல்வகைகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
நடப்பாண்டில் இந்த பகுதியில் நெல் நடவு பணி சற்று தாமதமாக ெதாடங்கப்பட்ட நிலையில் அறுவடை பணிகளும் தாமதமாகவே தொடங்கி உள்ளது. வழக்கமாக ஜனவரி மாத மத்தியில் நடைபெற வேண்டிய நெல் அறுவடை பணி, நடப்பாண்டில் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
எந்திரங்கள் மூலம் அறுவடை
இந்த நிலையில் தற்போது காவிரி கரை பாசனப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒரே நேரத்தில் அதிக அளவில் அறுவடை செய்து வருவதால், ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்களை, எந்திரங்கள் மூலம் அறுவடை செய்து வருகின்றனர்.
நெல்லே கூலி
சாதாரண நெல் அறுவடை எந்திரத்துக்கு ஒரு மணி நேரத்திற்கான கட்டணமாக ரூ.2 ஆயிரத்து 500 பெறப்படுகிறது. கன்வயர் பெல்ட்டுடன் கூடிய நவீன நெல் அறுவடை எந்திரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு கட்டணமாக ரூ.3 ஆயிரத்து 500 வரை பெறப்படுகிறது.
வேலையாட்கள் மூலம் அறுவடை செய்ய ஏக்கர் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரத்து 500 முதல் ரூ.13 ஆயிரம் வரை அல்லது அதற்கு ஈடாக அறுவடை செய்யப்பட்ட நெல்லில் இருந்து 8 மூட்டை நெல்லை தொழிலாளர்கள் கூலியாக பெற்று வருகின்றனர். பெரும்பாலான கூலித் தொழிலாளர்களுக்கு அறுவடை பணிக்கான கூலியாக நெல்லே வழங்கப்பட்டு வருகிறது.
மகிழ்ச்சி
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
எடப்பாடி சுற்றுப்புறங்களில் காவிரி பாசனப்பகுதிகளில் நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட 75 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல் ரூ.1,800 முதல் ரூ.1,900 வரை தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கிறார்கள்., அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தில் உயர்வகை நெல் ரகங்கள் குவிண்டால் ஒன்று ஊக்கத்தொகையுடன் சேர்த்து ரூ.2 ஆயிரத்து 160-க்கும், பொது ரக நெல் குவிண்டால் ஊக்கத்தொகையுடன் சேர்த்து ரூ.2 ஆயிரத்து 115-க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டில் காவிரி ஆற்றில் பாசன பயன்பாட்டிற்காக உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், இந்த பகுதியில் போதிய அளவு பருவமழை பெய்துள்ள நிலையில், நடப்பாண்டில் வழக்கத்தைவிட மகசூல் அதிகரித்துள்ளது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.