குமரியில் வகுப்பறைகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
குமரி மாவட்டத்தில் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி வகுப்பறைகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி வகுப்பறைகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்தது.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. குமாி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பையொட்டி முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் கலெக்டர் அரவிந்த் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மொத்தம் 806 உள்ளன. அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மேஜை மற்றும் நாற்காலிகள் போடப்பட்டு வருகிறது.
பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே மாணவ-மாணவிகளுக்கு நோட்டு மற்றும் புத்தகங்கள் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி மாவட்டத்தில் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நோட்டு மற்றும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் மொத்தம் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 447 புத்தகங்களும், ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 608 நோட்டுகளும் வழங்கப்பட உள்ளது.
தூய்மை பணி
இந்த நிலையில் நேற்று அனைத்து பள்ளிகளில் தூய்மை பணி நடந்தது. பள்ளி வளாகத்தில் தேவையில்லாமல் வளர்ந்திருந்த செடி, கொடிகள் வெட்டி அகற்றப்பட்டது. குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன. வகுப்பறைகளில் மேஜை மற்றும் நாற்காலிகளில் படிந்திருந்த தூசியை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தனர்.
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, வடிவீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் தூய்மை பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டன. இதுபோல், மாவட்டத்தில் உள்ள தக்கலை, குழித்துறை, திருவட்டார் போன்ற கல்வி மாவட்டங்களிலும் பள்ளிகளில் தூய்மை பணி நடந்தது. இந்த பணிகளை அந்தந்த கல்வி மாவட்ட அதிகாரிகள் கண்காணித்தனர்.