உடைந்த புதிய வாய்க்காலை அகற்றிவிட்டு மீண்டும் அமைக்கும் பணி தீவிரம்


உடைந்த புதிய வாய்க்காலை அகற்றிவிட்டு மீண்டும் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 2 March 2023 6:45 PM GMT (Updated: 2 March 2023 6:45 PM GMT)

தினத்தந்தி செய்தி எதிரொலியை தொடர்ந்து உடைந்த புதிய வாய்க்காலை அகற்றிவிட்டு மீண்டும் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சாலையின் இரு புறங்களிலும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணி முறையாக நடைபெறாத காரணத்தால் பல இடங்களில் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே வாய்க்காலின்பக்கவாட்டு மற்றும் மேல்பகுதியில் போடப்பட்ட கான்கிரீட் மூடிகள் ஆங்காங்கே இடிந்து விழுந்து வந்தன. இந்த நிலையில் கடந்த வாரம் உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி முன்பு வாய்க்காலின் மேல் பகுதியில் போடப்பட்ட கான்கிரீட் மூடிகள் இடிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடைந்த வாய்க்காலை அகற்றிவிட்டு மீண்டும் புதிதாக அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி நாளிதழில் நேற்று முன்தினம் வெளிவந்தது. இது பற்றி அறிந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேற்று உடைந்த மழைநீர் வடிகால் வாய்க்காலை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் விடுத்த உத்தரவின்பேரில் உடைந்த பகுதியில் உள்ள வாய்க்காலை உடனே அகற்றிவிட்டு அங்கு புதிதாக மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story