திருச்சி ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை
குடியரசு தினத்தையொட்டி திருச்சி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தையொட்டி திருச்சி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குடியரசு தினவிழா
குடியரசு தினவிழா நாளை (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நாளை காலை 8.05 மணி அளவில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார். தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்குகிறார்.
குடியரசு தினத்தையொட்டி திருச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி ரெயில் நிலையத்தில் நேற்று பகல் திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரெயிலில் உள்ள அனைத்து பெட்டிகளிலும் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.
வாகன சோதனை
ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளின் உைடமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டது. இதேபோல் மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்களிலும், வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருமண மண்டபங்கள், விடுதிகள் போன்றவற்றில் சந்தேகத்துக்கிடமான வகையில் தங்கியுள்ள நபர்களை கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தவிர, சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். முன்னதாக குடியரசு தினத்தையொட்டி போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
குடியரசு தின விழாவையொட்டி திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் நயாள் தலைமையில் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தொடர்ந்து பயணிகளின் உடைமைகளை ஸ்கேனர் கருவி கொண்டு சோதனை செய்யப்படுகிறது. அதன் பின் விமான டிக்கெட் ஆய்வு செய்யப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொள்வார்கள். தொடர்ந்து சுங்கத்துறையினர் சோதனை செய்தபின்பு விமானத்தில் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் மோப்பநாய் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை மறுஅறிவிப்பு வரும் வரை தொடரும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.