கூட்டுறவு கடன் சங்கங்களில் வட்டியில்லா பயிர்கடன்


கூட்டுறவு கடன் சங்கங்களில் வட்டியில்லா பயிர்கடன்
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

பயிர்கடன்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன், வட்டியில்லா கால்நடை பராமரிப்புக் கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறுதொழில் கடன் மற்றும் குறைந்த வட்டியில் மகளிர் சுயஉதவிக்குழு கடன், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார கடன், சிறுபான்மையினர் பொருளாதார கடன்கள் வழங்கப்படுகின்றன.

மேலும், விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களை கூட்டுறவு சங்க கிடங்குகளில் சேமித்து, அவற்றிற்கான விலை உயரும் போது, விற்பனை செய்ய ஏதுவாக தானிய ஈட்டுக்கடன்களும் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் தங்களது குடும்ப தேவைகளுக்காக கூட்டுறவு நிறுவனங்களில் நகைகளை அடமானமாக வைத்து கடன் பெற்றுக்கொள்ளலாம்.

ஆவணங்கள்

சங்கம் செயல்படும் விவகார எல்லையில் வசிக்கும் தகுதிவாய்ந்த அனைவரும் சங்கததில் உறுப்பினர்களாக சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். சங்கங்களில் உறுப்பினராக ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ரூ.110 (பங்குத்தொகை மற்றும் நுழைவு கட்டணம்) ஆகியவற்றுடன் பயிர்கடன் பெறுவோர் கணினி சிட்டா, அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் சங்கங்களை அணுக வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர் நலக்கடன், சிறுபான்மையினர் நலக்கடன் பெறுவோர் வருமான சான்று, சாதிசான்று, இருப்பிட சான்று, ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், பான் அட்டை நகல் ஆகிய ஆவணங்களையும், மகளிர் சுய உதவிக்குழு கடன் பெற விரும்பும் மகளிர் ஆதார், குடும்ப அட்டை ஆவணங்களுடன், அவர்கள் வசிக்கும் பகுதியில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுக வேண்டும்.

தொடர்பு கொள்ளலாம்

மேலும், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உர வகைகளும், அனைத்து சங்கங்களிலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சேவை குறைபாடுகள் தொடர்பாக கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, பர்கூர், ஊத்தங்கரை, மத்தூர் ஆகிய வட்டார பொதுமக்கள் கிருஷ்ணகிரி சரக துணைப்பதிவாளரை 73387 20526 என்ற எண்ணிலும், சூளகிரி, ஓசூர், தளி, கெலமங்கலம் ஆகிய வட்டார பொதுமக்கள் ஓசூர் சரக துணைப்பதிவாளரை 73387 20527 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story