ஓடும் ரெயிலில் பயணிகளிடம் போதையில் ரகளை; 3 போலீசார் அதிரடி கைது


ஓடும் ரெயிலில் பயணிகளிடம் போதையில் ரகளை; 3 போலீசார் அதிரடி கைது
x

ஓடும் ரெயிலில் குடிபோதையில் பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்ட 3 போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

விருத்தாசலம்,

சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி நேற்று முன்தினம் இரவு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலின் முன்பதிவு பெட்டி ஒன்றில் பயணம் செய்த 5 பேர் குடிபோதையில் இருந்தனர். அவர்கள், அதே பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் தகராறு செய்து, ரகளையில் ஈடுபட்டனர்.

இதை பொறுத்துக்கொள்ள முடியாத பயணிகள், இதுகுறித்து டிக்கெட் பரிசோதகரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அந்த டிக்கெட் பரிசோதகர் ரெயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்தார்.

இதனிடையே அந்த ரெயில் விழுப்புரத்தை தாண்டி இரவு 11.10 மணிக்கு விருத்தாசலம் ரெயில் நிலையத்திற்கு சென்றது. அங்கு தயார் நிலையில் இருந்த விருத்தாசலம் ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் இருப்புப்பாதை போலீசார் ரெயிலில் ஏறி பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்ட 5 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

போலீசார் கைது

விசாரணையில் அவர்கள் சென்னை பெரம்பூரை சேர்ந்த போலீஸ்காரர் மாணிக்கராஜ் (வயது 36), சென்னை ஆவடி கேம்ப்பில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் செந்தில்குமார் (41), திருவள்ளூர் சோலா நகரை சேர்ந்த என்ஜினீயர் பொன்னுசாமி (46), திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த என்ஜினீயர் முத்துக்குமார் (40), திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த முருகன்(54) என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக விருத்தாசலம் ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் இருப்புப்பாதை போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 போலீஸ்காரர்கள் உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.


Next Story