மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை ஒழிக்கும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்!
மாநகராட்சி, நகராட்சிகளில் பல்லாயிரக்கணக்கான நிரந்தர பணியிடங்களை ஒழிக்கும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசாங்கம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் குறிப்பிட்ட பணியிடங்களை தனியார்மயப்படுத்தும் அரசாணை ஒன்றை 2022 அக்டோபர் மாதத்தில் பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் சென்னை பெருநகரம் தவிர மற்ற நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப பணியிடங்களை உருவாக்கும்போது, நிரந்தர பணியிடங்களில் பெரும்பகுதியை நீக்கி அவுட்சோர்சிங் முறையில் நிரப்பிட தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மதுரை, கோவை போன்ற மாநகராட்சிகளில் 301 பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று 20 மாநகராட்சிகளிலும் ஆணையாளர் உட்பட மொத்தம் 3 ஆயிரத்து 147 பணியிடங்கள்தான் இருக்க வேண்டும் என அந்த ஆணை தெரிவிக்கிறது. உதாரணத்திற்கு திருப்பூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 1539 பணியிடங்களில் 254 இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. 1285 பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதுபோன்று அனைத்து மாநகராட்சிகளிலும் ஆயிரக்கணக்கான நிரந்தர பணியிடங்கள் ஒழிக்கப்பட்டுள்ளன. இது ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
தூய்மைப்பணி, மேற்பார்வை பணி, ஓட்டுநர், காவலர், குடிநீர் விநியோக பணியாளர்கள், வரி வசூலிக்கும் அலுவலர், ஆவண எழுத்தாளர், மின் பணியாளர் உட்பட பல்வேறு பணியிடங்களை அவுட் சோர்சிங் முறையில் நிரப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடங்களில் தற்போது பணியில் இருக்கும் பணியாளர்கள் ஓய்வு பெற்றவுடன் அந்த பணியிடங்களை நிரந்தரமாக எடுத்து விடுவது என்று உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனால் வாரிசு வேலை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட்டது. இந்த உத்தரவு மிகவும் ஆபத்தானதாகும்.
நிரந்தர பணியிடங்களை ஒழித்து வெளிமுகமையின் மூலம் ஒப்பந்த ஊழியர்களை நியமனம் செய்வது தமிழ்நாட்டில் அமலில் உள்ள 69 சதமான இடஒதுக்கீடு என்ற சமுக நீதிக்கோட்பாட்டை நீர்த்துப்போகச் செய்து விடும். நிரந்தர பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்துவது தொழிலாளர் நலன்களை பறித்து விடும் செயலாகும். சுகாதார ஆய்வாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது, அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு நிரந்தர வேலைக்கான வாய்ப்பு பாதிக்கப்படுவதோடு பொதுமக்களின் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகிவிடும்.
பெரும் மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளில், மக்களுக்கு சேவைகளை உறுதி செய்வதற்கு இந்த அறிவிப்பு எந்த விதத்திலும் உதவி செய்யாது. இந்த முடிவின் காரணமாக உள்ளாட்சி அமைப்பில் நிர்வாக கோளாறுகள் ஏற்படுவதுடன், ஒவ்வொருமுறை ஒப்பந்ததாரர் மாற்றப்படும்போதும் பணிகள் தேக்கமடையும். ஊழல் - முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். உள்ளாட்சி நிர்வாகத்தை லாப/நட்ட நோக்கில் அணுகுவது மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உதவாது. இது மக்கள் நலனுக்கு நேர் விரோதமானது, இளைஞர்களுக்கு எதிரானது.
நகராட்சிகளில் வார்டு சபைகளை ஏற்படுத்தி பாராட்டத்தக்க முன்முயற்சிகளை மேற்கொள்ளும் தமிழ்நாடு அரசாங்கம், மக்களுக்கும், ஊழியர்களுக்கும் விரோதமான அரசாணை எண் 152ஐ ரத்து செய்து, உள்ளாட்சி அமைப்புகளில் நிரந்தர பணியிடங்களை பாதுகாக்கவும், மக்கள் தொகை பெருக்கத்தினை கணக்கில் கொண்டு கூடுதலாக நிரந்தர பணியிடங்களை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்திடவும், பொதுமக்களுக்கு தரமான சேவை வழங்குவதை உறுதி செய்திடவும் வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.