கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி டி.வி. மெக்கானிக் உள்பட 2 பேர் பலி
காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி டி.வி. மெக்கானிக் உள்பட 2 பேர் பலியானார்கள்.
காட்டுமன்னார்கோவில்,
குளிக்க சென்றனர்
காட்டுமன்னார்கோவில் ஜீவரத்தினம்தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் பாபு (வயது 37). இவர் காட்டுமன்னார்கோவில்-சிதம்பரம் மெயின்ரோட்டில் டி.வி. மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்.
இவர் தனது நண்பர்களான வடக்கு கொளக்குடி ஜாகீ்ர்உசேன் நகரை சேர்ந்த கம்ப்யூட்டர் மெக்கானிக் உதயகுமார் (27), கருப்பேரி கிராமத்தை சேர்ந்த திருமாறன் (48), அதே ஊரைச் சேர்ந்த கார்த்தி (32), காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த மணி (47), திருநாரையூரை சேர்ந்த செந்தில்நாதன் (29) ஆகிய 6 பேரும் நேற்று மதியம் 12 மணி அளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் காட்டுமன்னார்கோவில் பகுதியில் இருந்து கருப்பேரி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக சென்றனர்.
2 பேர் பலி
பின்னர் அங்கு சென்றதும் பாபு, உதயகுமார் ஆகிய 2 பேரும் முதலில் ஆற்றில் இறங்கினர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் உள்ள சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர். இதை பார்த்த அவரது நண்பர்கள் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர்களால் நீண்ட நேரம் போராடியும் காப்பாற்ற முடிய வில்லை. சற்று நேரத்தில் அவர்கள் 2 பேரும் ஆற்றில் மூழ்கி பலியானர்கள். இந்த சம்பவம் பறறி தகவல் அறிந்ததும் காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் தலைமையிலான வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆற்றில் மூழ்கி இறந்த பாபு, உதயகுமார் ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களது உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது பற்றி காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.