தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
குழித்துறையில் தாமிரபரணி ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
குழித்துறை:
குழித்துறையில் தாமிரபரணி ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
தொழிலாளி
மார்த்தாண்டம் கிறிஸ்துராஜா பகுதி அக்கிவிளையை சேர்ந்தவர் மார்க்கோஸ் (வயது 55). இவருக்கு மெற்றில்டா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மார்க்கோஸ் வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மார்க்கோஸ் சொந்த ஊருக்கு திரும்பினார்.
ஆற்றில் மூழ்கினார்
ஊருக்கு வந்த மார்க்கோஸ் தினமும் குழித்துறையில் உள்ள தாமிரபரணி ஆற்றிக்கு குளிக்கச் சென்று விட்டு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினமும் வழக்கம்போல் மார்க்கோஸ் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் ஞாறான்விளை பகுதியில் குளிக்கச் சென்றார். ஆற்றில் தண்ணீர் அதிகளவு சென்றதாக கூறப்படுகிறது.
அதன்படி அவர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென மாயமானார். இதைகண்டு அருகில் குளித்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை ஆற்று வெள்ளம் அடித்துச் சென்றிருக்கலாம் என்று கருதினர். இதையடுத்து இதுபற்றி மார்க்கோசின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த மார்க்கோசின் மகன் அஸ்வின் (17) மற்றும் உறவினர்கள் அங்கு ஓடிவந்து பார்த்து ஆற்றில் இறங்கி தேடினர். அப்போது, குளித்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் இறந்த நிலையில் அரவது உடல் கரை ஒதுங்கி இருப்பதை கண்டு மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து மார்க்கோசின் மகன் அஸ்வின் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மார்த்தாண்டம் போலீசார் விரைந்து சென்று மார்க்கோசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.