கால்நடை மருத்துவமனை செயல்படும் நேரத்தை மாற்ற வேண்டும்


கால்நடை மருத்துவமனை செயல்படும் நேரத்தை மாற்ற வேண்டும்
x

இடுவாய் கிராம பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனை செயல்படும் நேரத்தை மாற்ற வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

திருப்பூர்

இடுவாய் கிராம பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனை செயல்படும் நேரத்தை மாற்ற வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

கால்நடை மருத்துவமனை

திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆர்.டி.ஓ. பண்டரிநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மங்கல கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் சி.பொன்னுசாமி கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

இடுவாய் கிராமத்தில் உள்ள சீரங்ககவுண்டன்பாளையம், சின்னக்காளிபாளையம், ஆட்டையாம்பாளையம் போன்ற பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக செயல்படுகிறது. கால்நடை வளர்ப்பிலும் ஈடுபடுகின்றனர். இங்கு ஒரே ஒரு கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். இவருக்கு உதவியாக கால்நடை ஆய்வாளரோ, கால்நடை பராமரிப்பு ஊழியரோ இல்லை. இதனால் விவசாயிகள் கொண்டு வரும் கால்நடைகள் சிகிச்சை பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே காலியாக உள்ள இடத்திற்கு புதிதாக ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் திருப்பூரில் உள்ள கால்நடை மருத்துவமனைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மதியம் 3 மணி முதல் 5 மணி வரையிலும் செயல்படுகிறது. ஆனால் மதியம் 3 மணி முதல் 5 மணி வரை உள்ள சமயம் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று திரும்பவும், பால் கறவை செய்யும் நேரம் என்பதால் இந்த நேரத்தில் சிகிச்சைக்கு கொண்டு சென்று அழைத்து செல்லுவது சரியாக இருக்காது. எனவே கால்நடை மருத்துவமனை நேரத்தை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை தொடர்ந்து செயல்பட தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மின் இணைப்பு

விவசாய மின் இணைப்பு பெற தேவையான ஆவணங்கள், சிட்டா, அடங்கல் ஆகியவற்றை விண்ணப்பம் செய்து கொடுத்தாலும் மின்சார வாரியத்தில் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிமைச்சான்று பெற்று வர வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இதனைதொடர்ந்து வருவாய்த்துறைக்கு சென்று கேட்டால் உரிமைச்சான்று வழங்கப்படுவதில்லை. சிட்டா, அடங்கல் ஆகிய சான்றிதழ்கள் போதுமானது என்கிறார்கள். ஆனால் மின்சார வாரியத்தில் உரிமைச்சான்று வேண்டும். இல்லையென்றால் பதிவு செய்ய முடியாது என்கிறார்கள். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீரபாண்டி உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் மாதம் மாதம் மின்பராமரிப்பு பணிக்காக ஒரு நாள் மின்தடை செய்யப்படுகிறது. அந்த நேரத்தில் மின் கம்பங்களுக்கு இடையே தாழ்வாக தொங்கிக்கொண்டிருக்கும் மின்கம்பிகளை சரிசெய்தல், பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. ஆனால் தற்போது மின் ஊழியர்கள் பற்றாக்குறையாலும், அவர்களுக்கு உயர் அதிகாரிகள் சரியான உத்தரவு பிறப்பிக்காததாலும் மின்தடை பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் நிகழாமல் தடுத்து மின் வினியோகம் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தார்ச்சாலை

மங்கலம் கிராமம் பகுதியில் சின்னாண்டிபாளையம் முதல் ராஜகணபதிநகர் வரை 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை மண் சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக அதிகமான பொதுமக்கள் சுல்தான்பேட்டைக்கும், மங்கலத்திற்கும் செல்கின்றனர். எனவே அதிகமான மக்கள் பயன்படுத்தும் மண் சாலையை தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.


Related Tags :
Next Story