மேட்டூர் அணை நீர்மட்டம் 54 அடியாக குறைந்தது


மேட்டூர் அணை நீர்மட்டம் 54 அடியாக குறைந்தது
x

மேட்டூர் அணை நீர்மட்டம் 54 அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர்,

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது.

இருப்பினும் அணையில் இருந்து பாசன தேவைக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மழையளவு குறைந்த நிலையில், அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு, டெல்டா பாசன விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கும் அளவு தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு நீர்வரத்து குறைவாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது.

குறிப்பாக கடந்த 12-ந் தேதி 55.54 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 54 அடியாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக சராசரியாக அணை நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு அரை அடி வீதம் குறைந்து கொண்டே வருகிறது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் முழுமையாக கிடைக்கவில்லை. எனவே தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் உடனடியாக திறந்து விட உத்தரவிட வேண்டி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

இருப்பினும் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் இன்றி பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக விவசாயிகள் கடந்த ஆண்டு பருவமழை அதிகரித்ததன் காரணமாக பாதிப்புக்கு உள்ளானார்கள்.

விவசாயிகள் கவலை

இந்த ஆண்டு பருவமழை இல்லாததால் தண்ணீர் இன்றி நெல் பயிர் மகசூல் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே கர்நாடகத்தில் இருந்து தற்போது திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தாலும், அது முழுமையான பலனை தருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

மொத்தம் 120 அடி நீர்மட்டம் கொண்ட மேட்டூர் அணையில் நேற்றைய நிலவரப்படி 54 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,478 கனஅடி வீதம் தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்பட்டு வருவதால் அணை நீர்மட்டம் இறங்குமுகமாகவே உள்ளது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது.


Next Story