சினிமா விநியோகஸ்தரிடம் ரூ.3 லட்சம் மோசடி இடைத்தரகர் கைது
மணலியில் சினிமா விநியோகஸ்தரிடம் ரூ.3 லட்சம் மோசடி இடைத்தரகர் கைது.
திருவொற்றியூர்,
மணலி கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்தவர் பியாரிலால் குந்தச்சா (வயது 57). சினிமா பட தயாரிப்பாளராகவும், விநியோகிஸ்தராகவும் இருந்து வருகிறார். சென்னை சைதாப்பேட்டை சுப்பிரமணி தெருவைச் சேர்ந்த சினிமா இடைத்தரகர் குமார் என்ற ராஜேந்திரகுமார் (58), வடபழனியைச் சேர்ந்த சினிமா பட விநியோகஸ்தர் பால்குமார் (56) ஆகிய இருவரும் பியாரிலால் குந்தச்சாவை சந்தித்து, புதிதாக தயாரிக்கப்பட்ட 'லடுக்கி' என்ற படத்தை (இந்தியில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட படம்) சென்னையில் பிரபலமான தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்காக ரூ.3 லட்சம் கடனாக பெற்றனர். படம் வெளியானதும் கடனை திருப்பி தருவதாகவும் எழுதி கொடுத்தனர்.
ஆனால் கடன் வாங்கிய இருவரும் கூறியதுபோல் தியேட்டர்களில் அந்த படம் வெளியாகவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பியாரிலால் குந்தச்சா ராஜேந்திரகுமார் மற்றும் பால்குமாரிடம் பணத்தை திரும்ப தருமாறு கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்ததோடு. பியாரிலால் குந்தச்சாவை மிரட்டினர். இந்த மோசடி குறித்து பியாரிலால் குந்தச்சா அளித்த புகாரின் பேரில் மணலி குற்றப்பிரிவு போலீசார் ராஜேந்திரகுமார் மற்றும் பால்குமார் ஆகியோர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் இடைத்தரகர் ராஜேந்திரகுமாரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவாக உள்ள பால்குமாரை தேடி வருகின்றனர்.