பால் வியாபாரி வெட்டிக் கொலை


பால் வியாபாரி வெட்டிக் கொலை
x

லத்தேரி அருகே பால் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து மற்றொரு பால் வியாபாரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்

பால் வியாபாரி

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுகா, லத்தேரியை அடுத்த பி.என்.பாளையம் ஊராட்சியில் உள்ள புதூர்கொல்லை மேடு பகுதியைச் சேர்ந்தவர் நாகேஷ் (வயது 41). இவர், கடந்த 5 ஆண்டுகளாக மேஸ்திரி தோப்பு பகுதியில் பால் கொள்முதல் நிலையம் நடத்தி வந்தார். அதேப் பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் கடந்த 15 ஆண்டுகளாக வீடு, வீடாகச் சென்று பால் கொள்முதல் செய்து வருகிறார்.

இதனால் பால் கொள்முதல் செய்து, விற்பனை செய்வதில் இருவருக்கும் இடையே தொழில் போட்டி ஏற்பட்டு விரோதம் வளர்ந்து வந்துள்ளது. அவ்வப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.

வெட்டிக்கொலை

வழக்கம்போல் நேற்று முன்தினம் நள்ளிரவு நாகேஷ், பால் கொள்முதல் நிலையத்தை மூடிவீட்டு வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமடக்கிய மர்மநபர் மார்பு மீது தாக்கி, கத்தியால் நாகேஷின் கழுத்துப் பகுதியில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த நாகேஷை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது நாகேஷ் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. இது குறித்து தகவலறிந்த லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் நாகேஷ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொழில் போட்டியா?

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழில் போட்டியால் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து அதேப்பகுதியை சேர்ந்த மற்றொரு பால் வியாபாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட நாகேசுக்கு கிரிஜா (37) என்ற மனைவியும், ஹரினி (17) என்ற மகளும், விஜயகுமார் (13) என்ற மகனும் உள்ளனர்.


Next Story