கயத்தாறு அருகே மொபட் மீது கார் மோதல்; டிப்பர்லாரி டிரைவர் பலி
கயத்தாறு அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் டிப்பர்லாரி டிரைவர் பலியானார்.
கயத்தாறு:
நெல்லை மாவட்டம் பாலாடைகட்டளை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த இசக்கி மகன் மாயாண்டி (வயது 40). டிப்பர் லாரி டிரைவர். இவர் நேற்று காலை 8 மணிக்கு டிப்பர் லாரியை கயத்தாறில் உள்ள குவாரியில் விட்டு விட்டு மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அரசன்குளம் அருகே மொபட் மீது அந்த வழியாக வந்த கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாயாண்டி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து, மாயாண்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்து போன மாயாண்டிக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.