அய்யர்மலையில் நிற்காமல் செல்லும் பஸ்கள்


அய்யர்மலையில் நிற்காமல் செல்லும் பஸ்கள்
x

அய்யர்மலையில் நிற்காமல் செல்லும் பஸ்கள் குறித்து நடவடிக்கை எடுக்க கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

பஸ்கள் நிற்பதில்லை

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் அய்யர்மலை உள்ளது. குளித்தலை - மணப்பாறை சாலையில் உள்ள இந்த ஊரில் இருந்து குளித்தலை மார்க்கமாக செல்லும் பஸ்களில் பொதுமக்கள் ஏறும் வகையில் அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவிலுக்கு செல்லும் வழி அருகே சாலையோரம் பல ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை ஒன்று கட்டப்பட்டது. ஆனால் இங்கு எந்த ஒரு பஸ்களும் நிறுத்தப்படுவதில்லை. இதற்கு மாறாக இங்கு கடைகள் உள்ள பகுதியில் பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிச்செல்ல படுகின்றனா். பல ஆண்டுகளாக இந்தநிலை தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்தநிலையில் பயன்பாடு இல்லாத இந்த பயணிகள் நிழற்குடை கடந்த 2013-14-ம் ஆண்டு ஊரக கட்டிடங்கள் பராமரிப்பு செய்தல் திட்டத்தில் ரூ.38 ஆயிரத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பிறகும் இங்கு பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை. இது ஒரு புறம் இருக்க, குளித்தலை அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் பஸ்சில் செல்வதற்கு குளித்தலை-மணப்பாறை சாலையில் அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையோரம் கடந்த 2010-11-ம் ஆண்டில் மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நிழற்குடை ஒன்று கட்டப்பட்டது. சில நாட்கள் மட்டுமே அங்கு பஸ்கள் நிறுத்தப்பட்டன. அதன் பிறகு அங்கு பஸ்கள் நிறுத்தப்படுவதே இல்லை.

மது பிரியர்கள்

அய்யர்மலை பகுதியில் கட்டப்பட்ட இந்த 2 பயணிகள் நிழற்குடையும் பல ஆண்டுகளாக பயனற்ற நிலையில் இருந்து வருகிறது. பல லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த 2 பயணிகள் நிழற்குடைகளும், விளம்பர பதாகைகள் ஒட்டுவதற்கும், மது பிரியர்கள், மது அருந்துவதற்கும், பலர் பொழுது போக்காக உட்காருவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதிலும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்காக கட்டப்பட்ட நிழற்குடையில் பயணிகள் அமர்வதற்காக போடப்பட்டிருந்த கடப்பா கற்களையும் யாரோ எடுத்து சென்றுவிட்டனர். மேலும் இங்கு யாரோ சிலர் தங்களது தங்குமிடமாக பயன்படுத்தி வருவதாகவும், பல வகையான குப்பைகள், பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் மூட்டை, மூட்டையாக இங்கு கட்டி அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனா்.

பஸ்கள் நிற்கவில்லை

இந்த சாலை வழியாக பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தினசரி சென்று வருகின்றனர். ஆனால் எவர் கண்ணிலும் இந்த அவல நிலை படவில்லையா? இல்லையெனில் அதிகாரிகள் இதை ஒரு பொருட்டாக கருதவில்லையா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கல்லூரி மாணவ-மாணவிகளுக்காக கட்டப்பட்ட நிழற்குடையில் பஸ்கள் நிற்காத காரணத்தால் கல்லூரியிலிருந்து நீண்ட தூரம் நடந்து வந்து மாணவ, கடைவீதி பகுதியில் பஸ் ஏறி செல்ல வேண்டியுள்ளது. கடும் வெயில் மற்றும் மழைக்காலங்களில் மாணவ மாணவிகள் மட்டுமல்லாது பஸ்சில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

கோரிக்கை

சாலையோரம் உள்ள கடைகளில் பயணிகள் நிற்பதால் அந்த கடைக்காரர்களுக்கு வியாபாரம் பாதிப்பு அடைய கூடும் எனக் கூறி கடை முன்பு எவரையும் நிற்க அனுமதிப்பதில்லை என கூறப்படுகிறது. பயணிகளை கேட்டால் பஸ்கள் கடைவீதியில் தான் நிற்கிறது அதனால் நாங்கள் கடைவீதி பகுதியில் நின்று ஏறி செல்கிறோம் என்று கூறுகின்றனர். பஸ் டிரைவர்களை கேட்டால் பயணிகள் யாரும் நிழற்குடையில் நிற்பதில்லை அதனால் பொதுமக்கள் எங்கு நிற்கிறார்களோ அங்கு நாங்கள் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கிறோம் என தெரிவிக்கின்றனர். எந்த தேவைக்காக பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டதோ அந்த தேவை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. பயணிகள் நிழற்குடையில் தான் பஸ்கள் நிற்கும் அங்குதான் பயணிகள் நிற்க வேண்டுமென்ற உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு முழுைமயான தீர்வு ஏற்படும் இல்லையெனில் பயனற்று கிடக்கும் பயணிகள் நிழற்குடை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறக்கூடும் என்பதில் ஐயமில்லை.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை சீரமைத்து மீண்டும் அங்கு பஸ்கள் நிறுத்தப்பட்டு மாணவ மாணவிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்திடம் கோரிக்கை மனு அளித்தது குறிப்பிட்டத்தக்கது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இந்த 2 பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் மட்டுமே பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கல்லூரி மாணவ-மாணவிகள் கருத்துகள் தெரிவித்துள்ளனர். அதன்விவரம் பின்வருமாறு:-

பயன்பாட்டிற்கு வர வேண்டும்

குளித்தலை அரசு கலைக்கல்லூரி மாணவர் ஈஸ்வரமூர்த்தி:-

அய்யர்மலை பகுதியில் தற்போது பஸ்கள் நிறுத்தப்படும் இடத்தில் நிற்பதற்கு போதுமான இடவசதி இல்லை. சாலையோரம் உள்ள கடைகளில் நிற்க வேண்டியுள்ளது. கடைக்காரர்கள் தங்களை நிற்பதற்கு அனுமதிப்பதில்லை. கல்லூரி மாணவர்களுக்காக கட்டப்பட்ட நிழற்குடை புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் கல்லூரி மாணவர்கள் அந்த இடத்தில் நின்று ஏற தயாராக இருக்கின்றனர். அதுபோல மணப்பாறை மார்க்கமாக செல்லும் புதிதாக பயணியர் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை குளித்தலை எம்.எல்.ஏ.விடம் தெரிவித்துள்ளோம்.

வெயிலில் நிற்கிறோம்

கல்லூரி மாணவர் பாலதண்டாயுதபாணி:- அய்யர்மலையில் உள்ள குளித்தலை அரசு கலைக்கல்லூரி காலை மற்றும் மதியம் என 2 பிரிவாக நடத்தப்படுகிறது. அதனால் மதிய நேரத்தில் கல்லூரி முடிந்து வரும் மாணவ, மாணவிகள் கொளுத்தும் வெயிலில் பஸ்சுக்காக நிற்க வேண்டி உள்ளது. மேலும் கல்லூரிக்கு சென்று வர அய்யர்மலையில் உள்ள குடியிருப்பு பகுதிகள் வழியாக பஸ் நிறுத்தத்திற்கு வந்தடைய நீண்ட நேரம் ஆகிறது. எனவே கல்லூரிக்கான நேரான சாலையில் மாணவ மாணவிகள் சென்று வர ஏற்கனவே கட்டப்பட்ட நிழற்குடையை சீரமைத்து பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டம் அதிகம்

கல்லூரி மாணவி அகிலா:-

அய்யர்மலை கடைவீதி பகுதியில் பஸ்கள் நின்று செல்வதால் ஒரே நேரத்தில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் ஒரே இடத்தில் நிற்கக்கூடிய நிலை இருக்கிறது. கூட்டம் அதிகமாக இருப்பதால் இங்குள்ள கடைகளின் முன்பு நிற்கிறோம். கடைக்காரர்கள் கடை முன்பு நிற்க அனுமதிப்பதில்லை.

அதுபோல இப்பகுதி வழியாக கடக்கும் அனைத்து பஸ்களும் அதிக கூட்டம் காரணமாக இங்கு நின்று செல்வதில்லை. அதனால் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டி இருக்கிறது. எனவே கல்லூரி மாணவா்களுக்காக கட்டப்பட்ட நிழற்குடையை சீரமைத்தால் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சிறுசிறு பிரச்சினை

கல்லூரி மாணவர் லோகதாமோதரன்:- அய்யர்மலை பகுதி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் பஸ்கள் இங்கு நிறுத்தப்படுவதில்லை. தனியார் பஸ்களும் ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே நிறுத்தப்படுகிறது. இதனால் வீட்டிற்கு செல்ல நீண்ட நேரம் ஆகிறது. கல்லூரிக்கு செல்லும் சாலை அருகே பஸ்கள் நிறுத்தப்பட்டால் கல்லூரிக்கு சென்று வரும் தூரம் குறைவாக இருக்கும்.

அதேநேரத்தில் நேரமும் குறையும். ேமலும், தற்போது கடைவீதி பகுதியில் பஸ்சுக்காக நிற்கும் போது கடைக்காரருடன் சில நேரங்களில் சிறுசிறு பிரச்சினைகளும் ஏற்படுகிறது. எனவே கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ்சில் ஏறி இறங்கி செல்லும் வகையில் ஏற்கனவே உள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது தொடர்பாக போக்குவரத்துத்துறை சார்ந்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அய்யர்மலை பகுதியில் எங்கு பஸ் நிறுத்த வேண்டும் என்று உறுதியாக தெரிவிக்கும் பட்சத்தில் அங்கு பஸ்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல பஸ்கள் நிற்காமல் சென்றால் அது குறித்து தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


Next Story