கடைகளில் அதிகாரிகள் சோதனை:22 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
கம்பம் பகுதியில் உள்ள கடைகளில் 22 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கம்பம் நகர் பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு இருப்பதாக நகராட்சி ஆணையர் வாசுதேவனுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் நேற்று சுகாதார அலுவலர் அரசக்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் லெனின் மற்றும் அதிகாரிகள் கம்பம் வேலப்பர் கோவில் தெரு, ஓடைக்கரைத் தெரு பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகள், டீக்கடை, காய்கறி கடைகளில் ஆய்வு நடத்தினர். இதில் ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து கடைகளில் இருந்த 22 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் ஆணையர் கூறுகையில், தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும். அப்போது பிளாஸ்டிக் பயன்பாடு இருப்பது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.