ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் வினியோகம் பாதியாக குறைப்பு


ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் வினியோகம் பாதியாக குறைப்பு
x

ரூ.3½ கோடி செலுத்த வேண்டி உள்ளதால் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் வினியோகம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக குடியாத்தம் நகரமன்ற கூட்டத்தில் தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்தார்.

வேலூர்

நகர மன்ற கூட்டம்

குடியாத்தம் நகரமன்ற கூட்டம், நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, பொறியாளர் சிசில்தாமஸ், மேலாளர் சுகந்தி, வருவாய் ஆய்வாளர் தீனதயாளன், நகரமைப்பு ஆய்வாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதி குறை மற்றும் கோரிக்கைகளை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

குடிநீர் வருவதில்லை

கவிதாபாபு:- எங்கள் பகுதியில் சாலைகள் பழுதடைந்துள்ளது. அதை சீரமைக்க வேண்டும். குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர வீணாவதை தடுக்க வேண்டும்.

முசீராஇர்பான்:- எங்கள் வார்டில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வருவதில்லை. சித்தூர் கேட் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டிக்கு ஒகேனக்கல் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும். பல பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் மிகவும் மோசமாக உள்ளதால் கழிவு நீர் சாலையில் செல்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.

ஆட்டோ மோகன்:- எங்கள் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பன்றிகள் உள்ளது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக பன்றிகளை அகற்ற வேண்டும். ஒருவழி பாதையாக உள்ள நேதாஜி சவுக் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

அதிகரிக்க வேண்டும்

நவீன்சங்கர்:- சமூக வலைதளங்களில் நகரமன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், நகராட்சி நிர்வாகம் குறித்து அவதூறு பரப்புகிறார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

உறுப்பினர்களின் கேள்விகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் பேசியதாவது:-

பாதியாக குறைப்பு

சாலைகள் பழுது குறித்து மனுஅளிக்கும் போது இது குறித்து சாட்டிலைட் மூலமாக சாலைகள் பழுதை அந்ததுறையினர் கண்காணித்து எந்த சாலை அதிக பழுது ஆனதோ அந்த சாலையை முதலில் அமைக்க நடவடிக்கை எடுக்கிறார்கள் விரைவில் அனைத்து சாலைகளும் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சியில் பொதுமக்கள் செலுத்த வேண்டிய குடிநீர் வரி பாக்கி ரூ.4 கோடிக்கு மேல் உள்ளது. அதேபோல் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு நகராட்சி சார்பில் ரூ.3 கோடியே 58 லட்சம் செலுத்த வேண்டி உள்ளது. அதற்காக தினமும் வழங்கப்பட்ட 70 லட்சம் லிட்டர் தண்ணீரை பாதியாக குறைத்து விட்டனர். முழு அளவு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் குடிநீர் வரி செலுத்தாத பொதுமக்களிடம் அறிவுறுத்தி வரி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு வார்டுக்கும் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுடைய தொலைபேசி எண்கள் அந்த பகுதி நகரமன்ற உறுப்பினரிடம் வழங்கப்படும். பன்றிகள், நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story