பழையபேட்டை பம்பன்குளத்தை ரூ.2 கோடியில் சீரமைக்கும் பணி; மேயர் தொடங்கி வைத்தார்


பழையபேட்டை பம்பன்குளத்தை ரூ.2 கோடியில் சீரமைக்கும் பணி; மேயர் தொடங்கி வைத்தார்
x

பழையபேட்டை பம்பன்குளத்தை ரூ.2 கோடியில் சீரமைக்கும் பணியை மேயர் சரவணன் தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி 17-வது வார்டு பழைய பேட்டை ராணி அண்ணா கல்லூரி அருகில் உள்ள பம்பன்குளத்தை அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் சீரமைத்து கரையினை உயர்த்தி, கல் பதித்து மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கரையில் தெரு விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை மேயர் பி.எம்.சரவணன் நேற்று தொடங்கி வைத்தார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மண்டல தலைவர் மகேஸ்வரி, உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் பைஜூ, உதவி பொறியாளர் பட்டுராஜன், ஒப்பந்ததாரர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நெல்லை டவுன் நெல்லைப்பர் கோவில் முன்பு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு பிரசார வாகன தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன் புகையில்லா போகி விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார்.

இதுபற்றி மேயர் பி.எம்.சரவணன் கூறியதாவது:-

நெல்லை மாநகரில் 4 மண்டல பகுதிகளில் பொது மக்கள் தங்களது பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய டயர்கள், பாய், மெத்தை, தலையணைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வருகிற 14-ந்தேதி (சனிக்கிழமை) போகி தினத்தன்று பொது மக்கள் குப்பைகளை தீ வைத்து கொளுத்தி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடாது. தேவையில்லாத பொருட்களை, மாநகராட்சி சார்பில் குப்பை சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் உலகநாதன், அல்லாபிச்சை, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, சுகாதார அலுவலர்கள் முருகேசன், இளங்கோ, சாகுல் அமீது, சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story