தமிழக அரசை கண்டித்து 29-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் -எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழக அரசை கண்டித்து 29-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,
ஊழலும், வன்முறையும், அராஜகமும் ஒன்றாய் சேர்ந்ததுதான் தி.மு.க. என்பதை நிரூபிக்கும் வகையில், தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு கூட மிகுந்த சிரமத்துடனும், அச்சத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். மக்களுக்கு சேவை செய்யவேண்டிய தி.மு.க. அமைச்சர்களோ, வாக்களித்த மக்களை கேலியும், கிண்டலும் செய்து, மிரட்டும் தொணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை நாட்டு மக்கள் அனைவரும் கண்கூடாக பார்த்து வருகிறார்கள். தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டு காலத்தில், அனைத்து துறைகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. தி.மு.க. ஆட்சியால் பலனடைந்தவர்கள் முதல்-அமைச்சரின் குடும்பமும், அவரது சொந்தங்களும் தான். தமிழ்நாட்டில் ஊழல் அசுர விகிதாசாரத்தை எட்டியுள்ளது. ஊழல் நடவடிக்கைகள் மற்றும் நிர்வாக திறமையின்மை ஆகியவற்றால் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை கடுமையாக சீர்குலைந்துள்ளது. மாநிலத்தில் மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கு அரசே பொறுப்பாகும். மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி, குடிநீர், கழிவுநீர் இணைப்பு முதலானவற்றின் கட்டணங்களை உயர்த்தி, மக்களை தாங்கொணா துயரத்துக்கு ஆளாக்கியது.
ஆர்ப்பாட்டம்
2 ஆண்டு இருண்ட தி.மு.க. ஆட்சியில், தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப்பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், அவற்றுக்கு முழு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில், மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பும், கலெக்டர் அலுவலகங்கள் இல்லாத மாவட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை, சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் இணைந்து மேற்கொள்ளவேண்டும். மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த தலைமைக்கழக செயலாளர்கள், அ.தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சி மற்றும் சார்பு அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கட்சி தொண்டர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.