பொங்கல் பண்டிகையையொட்டி வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை


பொங்கல் பண்டிகையையொட்டி வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 13 Jan 2023 6:46 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

கடலூர்

வேப்பூர்,

கடலூர் மாவட்டம் வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச்சந்தையில் காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும் என்பதால், வேப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள்.

அந்த வகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால், அதற்கு தேவையான பொருட்கள் வாங்க, நேற்று நடந்த வாரச்சந்தையில் ஏராளமானவர்கள் குவிந்திருந்தனர். இதனால் வழக்கத்துக்கு மாறாக சந்தை பரபரப்புடன் களைக்கட்டி காணப்பட்டது.

போட்டி போட்டு...

இதேபோன்று, இந்த சந்தையில் நடைபெறும் ஆட்டுச்சந்தையும் மிகவும் பிரபலமானது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் இங்கு வந்து ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

அந்த வகையில், பொங்கல் பண்டிகை வர உள்ள சூழ்நிலையில் அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்தது. அதேபோல் வியாபாரிகளும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குவிந்திருந்தனர். அவர்கள் விவசாயிகளிடம் இருந்து போட்டிப்போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.

ரூ.5 கோடிக்கு விற்பனை

மேலும், அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மக்களும் ஆடுகளை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. போட்டி நிலவியதன் காரணமாக, ஆடுகள் விலையும் சற்று அதிகரித்தே காணப்பட்டது.

வழக்கமாக சாதாரண நாட்களில் நடைபெறும் வாரச்சந்தையில் ரூ.1 கோடியில் இருந்து ரூ.2 கோடி வரைக்கும் விற்பனை செய்யப்படும். ஆனால், நேற்று சுமார் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகி இருக்கும் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.


Next Story