தமிழ்ப்பாட கற்றல் விளைவுக்கான புதிய 'செயலி' வடிவமைக்க பணிமனை
உடுமலையில் தமிழ்ப்பாட கற்றல் விளைவுக்கான புதிய செயலி வடிவமைப்பதற்கான ஆசிரியர்களுக்கான பணிமனை நடைபெற்றது.
2 நாள் பயிற்சி
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி திருமூர்த்திநகர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், மாவட்டம் சார்ந்த ஆராய்ச்சிச் செயல் திட்டத்துக்கான பணிமனை உடுமலை கச்சேரி வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று தொடங்கியது. இன்றும் (வெள்ளிக்கிழமை) தொடர்ந்து நடைபெறுகிறது. திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் சரவணகுமார் 2022-23 ம் கல்வி ஆண்டுக்கான மாவட்டம் சார்ந்த ஆராய்ச்சிச் செயல் திட்டத்தை, கற்றல் விளைவுகளில் திறன் அடைவைப் பெற தமிழ்ப் பாடத்திற்கான செயலியை வடிவமைத்தல் மற்றும் மதிப்பிடுதல் என்ற தலைப்பில் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஆசிரியர்களுக்குக்கற்றல் விளைவுகள் அடிப்படையில் செயல்பாடுகள் மற்றும் மதிப்பீட்டு வினாக்கள் உருவாக்குதல் பணிமனை நடைபெற்று வருகிறது. இந்த பணிமனையை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் தொடங்கி வைத்து கற்றல் விளைவுகளின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்களிடம் விளக்கிக் கூறினார். உடுமலை வட்டாரக் கல்வி அலுவலர் ஆறுமுகம் வாழ்த்திப்பேசினார்.
20 ஆசிரியர்கள்
மாவட்டம் சார்ந்த ஆராய்ச்சிச் செயல் திட்டத்தை மேற்கொண்டு வரும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் சரவணகுமார் கற்றல் விளைவுகளில் திறன் அடைவைப் பெற தமிழ்ப் பாடத்துக்கான செயலியை (ஆப்) எவ்வாறு வடிவமைப்பது, வகுப்பறைச் செயல்பாடுகளை எவ்வாறு மேற்கொள்வது, மதிப்பீட்டு வினாக்களை எவ்வாறு உருவாக்குவது, மதிப்பீட்டுக் கூறுகளை எவ்வாறு வடிவமைப்பது ஆகியவை குறித்து ஆசிரியர்களிடம் விளக்கிக்கூறினார். பணிமனையில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் அனைவரும் கற்றல் விளைவுகள் தொடர்பான திறன் அடைவைப் பெறுவதற்குத் தேவையான வகுப்பறைச் செயல்பாடுகள், மதிப்பீட்டு வினாக்கள் ஆகிய வளங்களைத் தயாரித்து குழுவில் கலந்துரையாடி வழங்கினர். இந்த பணிமனையில் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களைச் சார்ந்த 20 ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்ப்பாடக்கற்றல் விளைவுகளில் திறன் அடைவைப் பெற தமிழ்ப் பாடத்துக்கான செயலி உருவாக்கியவுடன் ஆசிரியர்களிடம் வழங்கி சோதித்துப் பார்க்கப்படவுள்ளது. இந்த பணிமனையை மாவட்டம் சார்ந்த ஆராய்ச்சியினை மேற்கொண்டு வரும் முதுநிலை விரிவுரையாளர் சரவணகுமார் ஒருங்கிணைத்திருந்தார்.